நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கிறது புராணங்கள் போற்றிய கூவைமலை பழனியாண்டவர் கோயில். மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனை போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சியளிப்பது வியப்பு. தலையில் கொண்டையும், வேங்கைமலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடிய முருகன், ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். காலில் காலணியும், வீரத்தண்டையும் அணிந்துள்ள முருகன், இடுப்பில் கத்தியும் வலது கையில் வஜ்ரவேலுவும் தாங்கியுள்ளார்.
மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே போகர், பழனியில் நவபாஷண முருகன் சிலையை உருவாக்கினார் என்பது பெருமைக்குரிய தகவல். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே சேவலை முருகன், கையிலேயே அடக்கி வைத்துள்ளதும் வித்தியாசமான வடிவமைப்பாக கருதப்படுகிறது. பழனியாண்டவர் சன்னதிக்கு இடது புறம் விஷ்ணு சன்னதியும், எதிரில் கருடாழ்வாரும், வலது புறம் நவக்கிரகங்கள், சனீஸ்வரர் சன்னதியும் இருப்பது சிறப்பு. இடும்பனுக்கும் இங்கே தனியாக சன்னதி உள்ளது. இடும்பனுக்கு பூஜை முடிந்த பின்னரே, முருகப்பெருமானுக்கு பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.‘படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார்.
மூவராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. இதனால் மூவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகத்திற்கு வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையை பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் தென்படும். மும்மூர்த்திகளுக்குரிய படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களையும் முருகன் தன்வசம் எடுத்துக்கொண்டு, கூவை குன்றின் மீது நின்று அருள்பாலித்து வருகிறார்,’ என்பது தலவரலாறு. இந்த வகையில் நன்மைகளை படைப்பதற்கும், நல்லவர்களை காப்பதற்கும், தீமைகளை அழிப்பதற்கும் துணை நிற்பார் கூவைமலை பழனியாண்டவர் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கை.
அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இத்திருத்தலம், அகத்தியர் பூஜித்த பெருமைக்கும் உரியது. சிவன்-பார்வதியின் அம்சம் என்பதையும் கூவைமலை முருகன் உணர்த்துகிறார். சிவனை உணர்த்தும் வகையில் நெற்றியில் மூன்று பட்டை வடிவில் திருநீறும், பார்வதியை குறிக்கும் வகையில் நெற்றியில் பொட்டும் காணப்படுகிறது.
இங்குள்ள மலையடி வாரத்தில் பாறைகளுக்கு இடையே, யானை வடிவத்தில் வற்றாத சுனையில் இரும்புச்சத்துடன் கூடிய நீர், ஓடிக்கொண்டிருக்கிறது. யானைப்பாலி தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் தோல் மற்றும் எலும்பு நோய்கள் குணமாகும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.