கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நேற்றிரவு ரயிலில் சென்ற பயணிகள் மீது அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் நோக்கி சென்ற விரைவு ரயில் எலத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டி.1 கோச்சில் பயணிகளின் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்ததில், 8 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நள்ளிரவு சடலங்களாக மீட்கப்பட்டனர். ரயிலில் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர்கள் உயிரிழந்ததிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கேரள காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பயணிகள் தெரிவித்த அடையாளங்களை வைத்து சந்தேகப்படும் நபரின் உருவத்தை வரைந்து வெளியிட்டுள்ள கேரள காவல் துறையினர், அந்த நபர் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.