சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம்: களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் (GLOBAL SPORTS CITY) அமைத்திட இடம் தேர்வு செய்வது தொடர்பாக செம்மஞ்சேரியில் நேற்று (2.4.2023) ஆய்வு மேற்கொண்டார்.

சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்காக தேவைப்படும் இடத்தின் பரப்பளவு, நிலத்தின் தன்மை மற்றும் வழித்தடங்கள், ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இணைப்புச் சாலை வசதிகள் குறித்து இடத்தின் மாதிரி வரைபடம் மூலம் அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாண்புமிகு அமைச்சர் , “தமிழ்நாட்டில் ஸ்போர்ட்ஸ் சிட்டி தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதற்காக இரண்டு இடங்களை ஆய்வு செய்ய உள்ளேன். அதில் செம்மஞ்சேரியில் கிட்டத்தக்க 105 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை இன்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன். விளையாட்டு நகரம் அமைக்க இந்த இடம் சிறப்பாக இருக்குமா, சாலை வசதி போன்ற அனைத்து வசதிகளையும் எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளோம் .

முதலமைச்சரிடம் இடம் தேர்வு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து தெரிவித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்போர்ட்ஸ் சிட்டி உலகத்தரத்தில் அமைந்தால் சிறப்பானதாக இருக்கும் . இது குறித்து சட்டமன்ற விளையாட்டுத் துறை மானியத்தில் விரிவாக பேசுவேன்” என தெரிவித்தார்.

ஆய்வின் போது, இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு ஆட்சித்தலைவர் ஆ.ர. ராகுல்நாத், சென்னை ஆட்சித் தலைவர் எஸ். அமிர்த ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.