சாத்தூர்: சாத்தூரில் நள்ளிரவில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு டிரைவர் பயணிகளை கீழே இறக்கியதால் 14 பேர் உயிர்தப்பினர்.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவைக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் அகிலன்(45) ஓட்டி வந்தார்.
பஸ்சில் 14 பயணிகள் இருந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நள்ளிரவு 12.45 மணியளவில் பஸ் வந்தபோது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து டிரைவர் அகிலன், பஸ்சை உடனடியாக சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது பஸ்சின் பின்புறம் தீப்பிடித்து லேசாக எரிய தொடங்கியது. இதையடுத்து துரிதமாக செயல்பட்டு பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பயணிகளை எழுப்பி கீழே இறக்கினார்.
பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. அவசர அவசரமாக பயணிகள் இறங்கியதால், அவர்களது உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. பயணிகள் மாற்று பஸ்சில் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் துரிதமாக செயல்பட்டதால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்தால் கோவில்பட்டி – மதுரை நான்குவழிச் சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எளிதில் வெடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் பஸ்சில் லக்கேஜாக எடுத்து செல்லப்பட்டதா அல்லது சாலையோரம் கிடந்த மர்ம பொருள் வெடித்து பஸ்சில் தீப்பிடித்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.