பீஜிங்: சீனாவில் மக்கள்தொகை குறைவதை கருத்தில்கொண்டு மாணவர்கள் காதலில் ஈடுபட வார விடுமுறையை கல்லூரிகள் வழங்கி வருகின்றன.
சீனாவில் 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022-ஆம் ஆண்டில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் சீன மக்கள்தொகை எண்ணிக்கை 1.41260 பில்லியன் ஆக இருந்த நிலையில், 2022-ஆம் ஆண்டின் முடிவில் சீனாவில் 1.41178 பில்லியன் மக்கள் மட்டுமே உள்ளதாகவும் சீன தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டில் சீனாவில் 1000 பேருக்கு 7.52 என்ற குழந்தைப் பிறப்பு விகிதம் இருந்த நிலையில், 2022-ஆம் ஆண்டில் இதன் அளவு 6.77 ஆகக் குறைந்துள்ளது. மேலும், இறப்பு விகிதம், பிறப்பு விகிதத்தைவிட அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இறப்பு விகிதம் 7.18 ஆக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் சீனாவில் 2035-ம் ஆண்டில் வயதானவர்கள் மட்டும் அதிகளவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனாவின் மக்கள்தொகையில் 60 வயதிற்கும் மேற்பட்டோர் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இதனால் சீனாவின் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் மாகாண அரசகள் அறிவித்து வருகின்றன.
அதன்படி, மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது அதிகபட்ச வரம்பை விட 20 சதவீதம் அதிகமாக கடன் வாங்க முடியும் என்று சீனாவின் ஹாங்சோ மாகாணம் அறிவித்துள்ளது. நான்சாங் மற்றும் சாங்ஷா மாகாணங்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு சலுகை திட்டங்களை உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் காதலில் விழ வாரவிடுமுறையை சீனாவில் இயங்கும் 9 கல்லூரிகள் வழங்கி உள்ளன. அந்த வகையில் சீனாவில் செயல்படும் ‘Mianyang Flying’ என்ற கல்லூரி, மாணவர்கள் காதலில் விழ வார விடுப்பு வழங்கியுள்ளது. இது குறித்து அக்கல்லூரியின் துணை முதல்வர் லியாங் கூறும்போது, “மாணவர்கள் பசுமையான நீர் நிலைகளுக்கு, பசுமையான மலைகளுக்கும் சென்று வசந்த காலத்தின் சுவாசத்தை உணர்வார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகையை அதிகரிக்க அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சீன கல்லூரிகள் இந்த விடுமுறைகளை மாணவர்களுக்கு வழங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.