சென்னை டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; இவ்வளவு வசதிகளா? தூள் பறக்கப் போகுது!

இன்னும் சில நாட்கள் தான். ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் இருந்து கோவைக்கு அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டிற்கு வரப் போகிறது. இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உடன் திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி இடையில் அகல ரயில் பாதை திட்டம், தாம்பரம் – செங்கோட்டை இடையில் வாரம் மூன்று நாட்கள் ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இவற்றில் பெரிதும் கவனம் ஈர்க்கக் கூடியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை. நாட்டிலேயே அதிவேகமாக செல்லக் கூடியது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் பயணிகள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

என்னென்ன வசதிகள்

கிட்டதட்ட விமான சேவையை போன்றது எனச் சொல்லலாம். முதலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதுமாக குளிர்சாதன வசதி கொண்டது. முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்கலாம். கட்டணம் சற்று அதிகம் தான். இந்த ரயிலில் தானியங்கி கதவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் வைஃபை வசதி இருக்கிறது. ஜிபிஎஸ் சேவையும் உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டுள்ளது.

அதிவேக பயணம்

பயோ கழிவறைகள் காணப்படுகின்றன. சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று ஆச்சரியப்படுத்தியது. இவ்வளவு வேகத்தில் ரயிலின் உட்புறத்தில் பெரிய அளவில் அதிர்வுகளோ அல்லது குலுங்கவோ இல்லை. அதிகபட்சமாக 1,128 பயணிகள் வரை செல்ல முடியும். இதுவரை 11 வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

12வது ரயில்

இதையடுத்து 12வது ரயில் சேவையாக சென்னை டூ கோவை வழித்தடம் அமையவுள்ளது. மற்ற வந்தே பாரத் ரயில்களில் 12 பெட்டிகள் இருக்கும் நிலையில், இந்த புதிய ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேர அட்டவணை வெளியாகி பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

நேர அட்டவணை

முதலில் கோவையில் காலை 6 மணிக்கு புறப்படுகிறது. நண்பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இடையில் திருப்பூர் (6.30), ஈரோடு (7.17), சேலம் (8.08) என மூன்று ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 2.20 மணிக்கு ரயில் புறப்படுகிறது. கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.

பயண நேரம்

இடையில் சேலம் (6.03), ஈரோடு (7.02), திருப்பூர் (7.43) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இடைப்பட்ட ரயில் நிலையங்களில் 2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை மற்றும் கோவைக்கு இடையிலான 495.28 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 10 நிமிடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து விடும். வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் ரயில் இயங்காது. மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.