ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில், ட்ரோன் மூலம் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொட்டலம் ஒன்றிலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஏப்.3) அதிகாலையில், ராக் பரோட்டியா பகுதி ரயில்வே லைன் அருகில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மூட்டையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட மூன்று கை துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து சம்பா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரிந்தர் சவுத்ரி கூறுகையில், “விஜயபுர் சரகத்திலுள்ள ராக் பரோட்டியா பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பொட்டலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து, போலீஸார், வெடிகுண்டு நிபுணர் குழு, தடயவியல் நிபுணர்கள் குழு அந்த இடத்திற்கு விரைந்து சென்றன.
முதலில் வெடிகுண்டுகள் ஏதாவது இருக்குமா என்று சோதனை செய்து பார்த்தோம். மீட்கப்பட்ட மூட்டையிலிருந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள், ஆறு மேகசின்கள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த மூட்டை சர்வதேச எல்லைக்கு வெளியில் இருந்து ட்ரோன் மூலமாக இங்கு வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த மூட்டையில் ஒரு பெட்டியும், 50 மீட்டர் நீளமுள்ள ஒரு பிளாஸ்டிக் குழாய் போல ஒரு பொருளும் இருந்தது. இந்தச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறுது விசாரணைக்குப் பின்னர் கூடுதல் தகவல்கள் தெரியவரும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.