சத்ரா: ஜார்க்கண்டில் போலீஸார் நேற்று நடத்திய என்கவுன்ட்டரில் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில போலீஸார் கூறியதாவது: சத்ரா பகுதியில் நக்ஸல்கள் அமைப்பைச் சேர்ந்த பலர் பதுங்கி உள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவரது தலைக்கு தலா ரூ.25 லட்சம், மற்ற இருவரது தலைக்கு தலா ரூ.5 லட்சம் வெகுமதி காவல் துறையால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களிடமிருந்து இரண்டு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை சத்தீஸ்கரில் கன்கெர் மாவட்டத்தில் போலீஸார் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் (டிஆர்ஜி) இணைந்து நடத்திய சோதனையில் 3 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அன்டாகார்க் நகர கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) கோமன் சின்ஹா தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்டவர்கள் சுமன் சிங் அஞ்சலா (42), சஞ்ஜய் குமார் உசிந்தி (27), பரஸ்ராம் தங்குல் (55) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தல், கோபுரங்களுக்குத் தீ வைத்தல், காவல் துறை இன்ஃபார்மர்கள் என்று முத்திரை குத்தி, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏஎஸ்பி தெரிவித்தார்.