புதுச்சேரி: உயர் சிகிச்சைக்கு கட்டணம் அறிவிப்பால் ஜிப்மரில் திமுக நடத்திய தர்ணா போராட்டத்தால் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 4 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி ஜிப்மரில் புதிய மேம்பட்ட உயர் மதிப்பு சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ரூ.500 முதல் ரூ.12,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்கப்பட வேண்டும்.
நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மேம்பட்ட சிகிச்சைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடம் இருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும். இதில் அடிப்படை பரிசோதனை சேவைகள் இலவசமாக தரப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஜிப்மரில் புதுச்சேரி மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். பலருக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லை. ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரி சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் சிவா உட்பட எம்எல்ஏக்கள் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில், ஜிப்மர் நிர்வாகம் கொண்டு வந்துள்ள சிகிச்சைக்கு கட்டண முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி மாநில திமுக சார்பில் ஜிப்மர் நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் தர்ணாவிலும் ஈடுபட்டதால், எதிர்கட்சித் தலைவர் சிவா, 3 எம்எல்ஏக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பேட்டோரை எஸ்பி பக்தவச்சலம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
ஜிப்மர் இயக்குநரை திரும்ப பெறும் வரை திமுக போராட்டத்தை தொடர முடிவு. ஜிப்மருக்கு எதிராக போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், “ஜிப்மர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இயக்குனர் சீர்குலைத்துள்ளார். தன்னுடைய சர்வாதிகாரப் போக்கால் ஏழை எளிய மக்களை துச்சமாக நினைத்து மருத்துவம் பார்க்க வரும் கர்ப்பிணி தாய்மார்கள், அவசர சிகிச்சைக்கு வருபவர்களை எல்லாம் திருப்பி அனுப்பி வருகிறார். மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்திற்கு கூட மருத்துவம் பார்க்க முடியாது என்று சொல்லும் நிலை ஜிப்மரில் தொடர்கிறது.
ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மருந்துகள் எல்லாம் தற்பொழுது வெளியில் வாங்கச் சொல்லுகிறார்கள். ஜிப்மரில் கொள்முதல் செய்யும் மருந்துகள் அதானிக்கு சொந்தமான ஜெம்ஸ் என்ற நிறுவனத்திடம் பெறுகின்றனர். புதுச்சேரியில் நடைபெறும் அனைத்து விவகாரத்திலும் தலையிடும் ஆளுநர் ஜிப்மர் விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை.
மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தை துச்சமாக எண்ணி, ஏழை மக்களுக்கு விரோதமாக இருக்கும் இயக்குநர் மீது ஆளுநர் ஏன் மத்திய அரசுக்கு புகார் அளிக்கவில்லை. ஜிப்மர் இயக்குநரையும் அவரது கூட்டாளிகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் எங்கள் போராட்டம் தொடரும்” என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.