சிலிகுரி: நாட்டின் பல இடங்களில் நடைபெறும் ஜி20யின் செயல்பாட்டு கூட்டத்தால், இந்தியாவின் பெருமைகள் வெளி உலகுக்கு தெரிய வரும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.
ஜி20 மாநாட்டின் செயல்பாட்டுக் கூட்டம் மேற்குவங்க மாநிலம் சிலிகுரி மற்றும் டார்ஜிலிங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இடையே சாகச சுற்றுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று இரண்டு நிகழ்ச்சிகளை மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்குப் பகுதி வளர்ச்சித்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி துவக்கி வைத்தார். அவருடன் மத்திய சிறுபான்மைத் துறையின் இணை அமைச்சர் ஜான் பர்லாவும் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கிஷண் ரெட்டி பேசியதாவது. வட கிழக்குப் பகுதியின் நுழைவு வாயிலாக சிலிகுரி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வருபவர்களுக்கு மகத்தான சுற்றுலா அனுபவம் கிடைக்கிறது. இத்துடன் கோயில்கள், தேசிய பூங்காக்கள், நீர் சாகச விளையாட்டு போன்றவைகள் உள்ளன. இங்குள்ள இமாலயன் ரயில்வே பொம்மை ரயில், யுனெஸ்கோ பட்டியலில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளது.
இருநூறுக்கும் மேற்பட்ட புத்த மடாலயங்கள், யுனெஸ்கோவின் 40 உலக பாரம்பரிய சுற்றுலாப் பகுதிகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய தொல்லிய ஆய்வு பகுதிகள், கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு மதங்களின் புனிதத் தலங்கள் உள்ளிட்ட பலவும் ஜி20யின் முதல் செயல்பாட்டுக் கூட்டத்தில் பட்டியலிடப்பட்டன.
தற்போது துவங்கிய இரண்டாம் செயல்பாட்டுக் கூட்டத்தில் உள் நாட்டுச் சுற்றுலாவின் சிறப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதற்காக மத்திய அரசு, ‘விஷன் இந்தியா 2023’ எனும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இதன்படி, வரும் 2027-ம் ஆண்டில் இந்தியாவின் சுற்றுலாப் பொருளாதாரத்தை, ஒரு டிரில்லியன் டாலராக (ரூ.82 லட்சம் கோடி) உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆவது ஆண்டில், சர்வதேச சுற்றுலா பயணிகள் 10 கோடி பேரை வரவழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்தியாவின் ஆன்மிகம், கலாச்சாரம் மற்றும்இயற்கை பாரம்பரியம் ஆகியவற்றின் பெருமைகள் வெளி உலகிற்கு தெரியவரும். இந்தியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அதன் தொடர்புள்ள தொழில்களுக்கு அரசு ஆதரவளிக்க உள்ளது. இதனால், வேலைவாய்ப்புகளும் பெருகும். இதற்காக மாநில அரசுகள், தனியார் உள்ளிட்டோருடன் டெல்லியில் அடுத்த மாதம் சர்வதேச சுற்றுலா மாநாடு நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்திற்கு முன்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, ‘இமாலயன் டிரைவ் 9’ எனும் பெயரிலான வாகனங்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பல்வேறு நிறுவனங்களின் வாகனங்கள் மேற்குவங்க மாநிலம் முழுவதிலும் பயணம் செய்து, ஜி20 மாநாடு மற்றும் அதில் உருவான சாகச சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் முன் எடுத்துரைக்க உள்ளது.