டெல்லியில் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதிக்கான தேசிய மாநாடு: காணொளி வாயிலாக தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது.

சமூக நீதிப் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது மற்றும் சமூக நீதி திட்டத்தின் தேசிய செயல்பாடுகளில் இணைவது என்ற கருபொருளுடன் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த மாநாட்டை ஓய்வுபெற்ற நீதிபதி ஈஸ்வரய்யா ஒருங்கிணைத்து வருகிறார். மாநாட்டில், ராஜஸ்தான மாநில முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், பிஹார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பஃரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் டெரிக் ஓ பிரெய்ன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும் இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் சார்பில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் காணொளி வாயிலாக இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இதேபோன்ற முன்னெடுப்பை, 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் திமுக எடுத்திருந்தது. டெல்லியில் உள்ள மகராஷ்டிரா பவனில் நடக்கும் இந்த மாநாட்டில் எம்பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார், கிரிராஜன், வில்சன், திருச்சி சிவா மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்பி, எம்எல்ஏக்களும் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.