தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை, அவ்வாறு செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “மரக்காணம் தாலுகாவில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பல்வேறு கனிமவளங்கள் உள்ளன. அதில், நல்முக்கல் மற்றும் கீழ் அரங்குணம் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கனிம வளங்களை மாவட்ட நிர்வாகம் 5 முதல் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற பெயரில் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. நல்முக்கல் கிராமத்தில் குத்தகை எடுத்தவர்கள் கடந்த 2019ல் குத்தகை காலம் முடிந்தும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான அபாயகரமான வெடிப்பொருட்களை உபயோகித்து பாறைகளை உடைத்து சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் இயங்கும் இவைகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குத்தகை காலம் முடிந்து சட்டவிரோதமாக இயங்கிவரும் குவாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளின்படி குவாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என அனுமதிக்கப்பட்டுள்ளதோ? அதன்படி குவாரிகள் இயக்கத்தை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். சட்டவிரோத குவாரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பீளிடர் முத்துகுமார் “தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை. சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அரசுத் தரப்பு விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.