தமிழ் திரையரங்குகளுக்கு முக்கிய கட்டுப்பாடு..காரணம் இதுதான்

கடந்த 2020 முதல் 2022 வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்திய கொடிய கொரோனா வைரஸ் கடந்த ஓராண்டில் சற்று குறைந்து பழைய நிலைக்கு வாழ்க்கை முறை திரும்பியது. இதனிடையே கடந்த சில வாரங்களில் மீண்டும் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு இடங்களில் மீண்டும் சில கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி டந்த சில நாட்களாக தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,641 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் ஒரு நாளில் 3,796 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 172 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு 35,97,118 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிபடியாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை தரப்பில் திரையரங்குகளுக்கு சில முக்கிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் நேற்று முன் தினம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 100% முக்கவசம் கட்டாயம் என அரசு அறிவித்தது.

இதனிடையே இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் இல்லை என்பதால் அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் இனி திரையரங்குகள், ஏசி வசதி உள்ள அரங்குகள், கவியரங்கங்கள் ஆகியவற்றில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் இன்று தெரிவித்துள்ளார். இதனால் இனி மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதற்கு முன் மாஸ்க் கட்டாயமாக்க அணிந்துருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.