சென்னை: “இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் திமுகவின் உறுப்பினர் எண்ணிக்கையை இரு மடங்காக்கும் புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு அனைத்துப் பகுதிகளிலும் விரைவாகவும், சரியாகவும், முழுமையாகவும் நடைபெற வேண்டும்” என்று அக்கட்சியின் தொண்டர்களுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தலைவர் கலைஞருக்கு அவருடைய நூற்றாண்டு தொடக்க விழாவில் நாம் செலுத்தும் நன்றியாக, உடன்பிறப்புகளாம் உறுப்பினர்களை இருமடங்காக்கி, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டவேண்டும் என்று 22-03-2023 அன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நாளை (ஏப்ரல் 4) முதல் நடைபெறவிருக்கிறது. கொளத்தூர் தொகுதியில் நான் நேரடியாக இதனைத் தொடங்கி வைக்க இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டக் கழக நிர்வாகங்களுக்கும் உட்பட்ட தொகுதிகளில் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளைவாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி முனைப்பாக நடைபெறவிருக்கிறது.
திமுகவில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களைத் தவிர்த்து, புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விதிமுறைகள் – வழிமுறைகள், தொகுதிவாரியாக உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தலைமைக் கழகத்தால் மாவட்டக் கழகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஒத்துழைப்பு நல்கிடுவதற்காகத் தொகுதிப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை மேற்கொண்டிட வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளாக உள்ள கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வில் கழக நிர்வாகிகளுடன் இணைந்து பங்கேற்று செயலாற்றிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்திலோ, வார இறுதி நாட்களிலோ, மற்ற விடுமுறை நாட்களிலோ மக்களை நேரடியாக சந்தித்து, இரண்டாண்டுகால கழக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துச் சொல்லி, ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என அன்பழைப்பு விடுத்து, அவர்களின் முழு விருப்பத்துடன் உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும்.
உறுப்பினர் கட்டணம் பத்து ரூபாய். வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டே உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். அதனால் புதிய உறுப்பினர் எந்தத் தொகுதியைச் சேர்ந்தவர், அது எந்த கழக மாவட்டத்திற்கு உட்பட்டது, எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தக்கூடியவர் என்பது உள்பட அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இணையவழியாகவும் (www.udanpirappu.com) உறுப்பினராக சேரலாம். அவர்களின் விவரங்களும் மாவட்டக் கழகத்தினரால் சரிபார்க்கப்பட்ட பிறகே உறுப்பினர் அட்டை வழங்கப்படும். இவற்றைக் கவனத்தில் கொண்டு உறுப்பினர் சேர்ப்பு பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டுகிறேன்.
இரண்டு கோடி உடன்பிறப்புகள் என்ற இலக்குடன் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை இருமடங்காக்கும் புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு அனைத்துப் பகுதிகளிலும் விரைவாகவும் – சரியாகவும் – முழுமையாகவும் நடைபெற வேண்டும். உங்களின் முனைப்பான உழைப்பினால் இரண்டு கோடிக்கும் மேலாகக் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கை உங்களில் ஒருவனான எனக்கு முழுமையாக இருக்கிறது.
திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களும், திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயன் பெற்றவர்களும், பெற இருப்பவர்களும் புதிய உறுப்பினர்களாக விரும்பி இணையும்போது, கழகத்தின் வலிமை பெருகும். அது அடுத்தடுத்த தொடர் வெற்றிகளுக்கு உத்தரவாதத்தை வழங்கும்.
தற்போதுள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு விரைந்து அனுப்பிட வேண்டும். 2023 ஜூன் 3-ஆம் நாள் திருவாரூரில் கலைஞர் கோட்டமும் அருங்காட்சியகமும் திறக்கப்படும் நாளில், கோட்டம் போல உயர்ந்து நிற்க வேண்டும் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை” என்று அவர் கூறியுள்ளார்.