“திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்?” – பி.ஆர்.பாண்டியன் கேள்வி

தஞ்சாவூர்: திருமண்டங்குடி சர்க்கரைஆலை விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காமல், மவுனமாக இருப்பது ஏன் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சுமார் ரூ.400 கோடியை விவசாயிகள் பெயரில் வங்கியில் கடனை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டித்து 125-வது நாளாக இன்று ஆலை நிர்வாகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் நேரில் ஆதரவு தெரிவித்துவிட்டு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: “திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை நிறுவனம் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையாக 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலும் ரூ.122 கோடி நிலுவை வைத்துள்ளது. அக்காலகட்டங்களில் உற்பத்திக்கு பெற்ற கடன் திரும்ப செலுத்த முடியாமல் வங்கிகளின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி விவசாயிகளுக்கு தெரியாமலேயே விவசாயிகள் பெயரில் மோசடியாக பல்வேறு வங்கிகளில் ரூ.400 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. தற்போது விவசாயிகளை வங்கிகள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து கருப்பு பட்டியலில் இணைத்துள்ளனர். இதனை அறிந்து 2019-ம் ஆண்டு முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திமுக 2021-ல் தனது தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளை அழைத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆரூரன் சர்க்கரை ஆலையை அரசுடைமை ஆக்கி, விவசாயிகள் பெயரில் மோசடி செய்துள்ள கடன் தொகையை வங்கிகளுக்கு ஈடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தார்கள். அதனை நம்பி வாக்களித்த விவசாயிகளை இன்றைக்கு அரசு ஏமாற்றி வருகிறது.

ஆரூரான் சர்க்கரை ஆலையை கால்ஸ் என்கிற நிறுவனம் விலைக்கு வாங்கி உள்ளனர். விவசாயிகள் பெயரில் வங்கிகளின் கடன் நிலுவைத் தொகையை ஈடு செய்ய மறுப்பதோடு, நீதி கேட்டு போராடுகிற விவசாயிகளை காவல் துறை மூலம் வழக்கு போட்டு அச்சுறுத்துகிறது.

2019 -ல் விவசாயிகள் போராட்டத்தை ஏற்று அன்றைக்கு ஆட்சியில் இருந்த பழனிசாமி தலைமையிலான காவல் துறை ஆலை உரிமையாளர் ராம்.தியாகராஜனை கைது செய்து கடலூர் காவல் நிலையத்தில் சிறை வைத்தது. ஆனால், இன்றைக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளை வழக்கு போட்டு மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலை பிரச்சனை குறித்து எழுப்பிய போது வேளாண் துறை அமைச்சர் பதிலளிக்க மறுத்தது ஏன்? கல்வி அமைச்சர் விரைவில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணப்படும் என்று உத்தரவாதப்படுத்தினார். இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக வங்கி கடன் என்பது மயிலாடுதுறை. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பெயரில் அரியலூர், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாக வங்கியாளர்கள் பட்டியல் வைத்துள்ளனர்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாவட்ட நிர்வாகமோ, துறைசார அமைச்சர்களோ தீர்க்க முடியாது. முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் வங்கியாளர்கள் கூட்டத்தை நடத்தி கடன் நிலுவை குறித்து உண்மை நிலையை அறிய வேண்டும். விவசாயின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்ப பெற முயற்சிக்க வேண்டும்” என்றார்.

அப்போது போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், முருகேசன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் எம்.கிருஷ்ணமணி, மாநில துணைச் செயலாளர் எம். செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.