திருவண்ணாமலை மாவட்டத்தில் சொர்ணவாரி பட்டத்தில் விவசாய பணிகள் மும்முரம்: கோ 51, மகேந்திரா ரக நெல் அதிகளவில் விதைப்பு

பெரணமல்லூர்:  திருவண்ணாமலை மாவட்டத்தில், சொர்ணவாரி பட்டத்தில் விவசாயம் செய்ய விளை நிலத்தினை சரி செய்தும், விதைகளை விதைத்தும் விவசாயிகள் ஆர்வமுடன் பணிகளில் ஈடுபட்டு  வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக இடி, மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளங்களில் ஓரளவு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தவிர, விவசாயம் செய்வதற்கு கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, விவசாயிகள் தற்போது சொர்ணவாரி பட்டத்தில் விவசாயம் செய்ய ஆயுத்தமாகி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியுள்ளதாவது: சொர்ணவாரி பட்டம், சம்பா பட்டம், நவரை பட்டம் என ஆண்டிற்கு 3 பட்டங்களாக பிரித்து விவசாயம் செய்து வருகிறோம். சம்பா பட்டத்தில் அதிக லாபம் பார்க்க முடியாது. நவரை பட்டத்தில் ஓரளவு மகசூல் கிடைக்கும். சொர்ணவாரி பட்டத்தில் மகசூல் அதிகம் கிடைக்கும்.

தற்போது, சொர்ணவாரி பட்டத்திற்குரிய கோடை மாதத்தில் மாவட்டம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதனால், அனைவரும் சொர்ணவாரி பட்டத்தை குறி வைத்து விளைநிலங்களில் விதைகளை விதைக்க தயாராகி வருகிறோம். இந்த பட்டத்திற்கு கோ 51, மகேந்திரா ரக நெல் விதைகளை அதிகம் பயன்படுத்த உள்ளோம். அதில், கோ 51 ரக நெல் விதைகளை பயன்படுத்தும்போது முதலில் வயலில் அதற்கான நெல் விதைகளை பெட்டி வடிவில் உள்ள பிளாஸ்டிக் பாக்ஸில் போட்டு விடுவோம். சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்க புடவையை முளைக்கும் நாற்று மீது மூடி விடுவோம். தொடர்ந்து, 15 நாட்கள் கழித்து வளர்ந்த நாற்றை பிடுங்கி வயலில் நடுவோம்.

மேலும், இந்த ரக நெல் விதைகள் குறிப்பிட்ட  சில நாட்களிலேயே வளர்ந்து விடுவதாலும், ஆட்கள் பற்றாக்குறையினால் மிஷின் மூலம் நடவு செய்வதற்கும் நன்றாக உள்ளதால் அதிகம் இதனை பயன்படுத்தி வருகிறோம். தவிர, மாவட்டம் முழுவதும் சொர்ணவாரி பட்டத்தில் மகசூல் அதிகரிக்க விவசாய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.