தென்னாட்டின் ஜாலியன் வாலாபாக் தெரியுமா.? – பொதுக்கூட்டத்திற்கு அழைக்கும் தமிழ் தேசிய அமைப்பு.!

தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காம நல்லூர் போராட்டம் தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழ் தேசிய அமைப்பான மே 17 இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த குற்றப்பரம்பரை சட்டம் அல்லது ரேகைச் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில சமூகத்தினரின் முன்னோர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்தி, அவர்களின் வாரிசுகளும் குற்றவாளிகளே என்று முத்திரை குத்தியது. இவ்வாறு வகைப்படுத்தபட்டவர்கள், இரவில் வீட்டில் தங்காது, ஊரின் மத்தியில் உள்ளிட்ட காவல்துறையின் சாவடியில் தங்க நிரபந்திக்கப்பட்டனர். தங்கியதற்கு சான்றாக பதிவேட்டில் ‘கைரேகையை’ பதிவிடும்படி வலியுறுத்தப்பட்டதால் இது ‘ரேகைச்சட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

பெருங்காமநல்லூர் போராட்டம்

இத்தகைய கொடூர கருப்புச்சட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டத்தின் பல கிராமங்களில் மக்கள் போராடத் தொடங்கினர். 1920, ஏப்ரல் 3-ம் நாள் ஆங்கிலேய அரசின் காவல்துறை உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தை முற்றுகையிட்டது. அங்கு போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. காயம்பட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்த மாயக்காள் என்பவரை துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் குத்திக் கொன்றனர். இந்த தாக்குதலில் 17 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக்

தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என்று அறியப்படும் பெருங்காமநல்லூர் படுகொலை சம்பவம் ஒரு வரலாற்று நினைவுப் புள்ளியாகும். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை எதிர்த்தும், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தும் போராடி உயிர் தியாகம் செய்த 17 தமிழர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

இந்தப் படுகொலையின் 103-வது ஆண்டை நினைவுகூரும் விதமாக, வரும் ஏப்ரல் 7 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நினைவுகூரும் இந்த பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருமாறு அழைக்கிறோம்.

ரோசாப்பூ துரை

அதன் பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகக் கேரளாவைச் சேர்ந்தவரும் மதுரையில் குடியிருந்தவருமான ஜார்ஜ் ஜோசப் என்ற வழக்குரைஞர் முதன்முறையாகக் கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களைத் திரட்டிக் குறிப்பாகக் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கெதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தார். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பூ துரை’ என்றே அழைத்தனர். அவரது நினைவாக, இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்

குற்றப்பரம்பரை சட்டம்

குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்பது இந்தியாவில், ஆங்கிலேய ஆட்சியின் பொழுது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல் இயற்றப்பட்டது.

தக்கீ

வடக்கே பிரபலாமான குற்றப்பரம்பரையினர் தக்கீகள் ஆவர். நாடோடி கொள்ளையர்களான இவர்கள் 17, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தனர். வியாபாரிகள், அதிலும் குறிப்பாக நெடுந்தொலைவு நடந்தும், குதிரையிலும் செல்லும் வியாபாரிகளே இவர்களின் முக்கிய இலக்காயினர். கொள்ளைக்கு இடையூறாய் உரிமைதாரர் இருப்பதால், பெரும்பாலும் கொலையும் களவின் ஒரு பகுதியாகவே போனது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் தக்கீயர் கொன்றிருப்பதாகக் கின்னஸ் புத்தகம் கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.