புதுடில்லி, உலகின் 14 நாடுகளில் இருந்து, மிகவும் தேடப்படும் 28 தாதாக்கள் செயல்படுவதாக கூறி அவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, கனடாவில் ஒன்பது பேரும், அமெரிக்காவில் ஐந்து பேரும் பதுங்கியுள்ளதாகக் தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி அங்கிருந்து செயல்படும் 28 தாதாக்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. நம் நாட்டில் போலீசாரால் தேடப்பட்டு வரும் இந்த தாதாக்கள், 14 வெளிநாடுகளில் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் கோல்டி ப்ரார் என்ற சதீந்தர்ஜித் சிங்கிற்கு எதிராக கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவரோடு, திரையுலகம் மற்றும் வர்த்தக உலகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளை குறி வைத்து கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட அன்மோல் பிஷ்னோய் உட்பட ஐந்து பேர் அமெரிக்காவில் பதுங்கி உள்ளனர். குர்பீந்தர் சிங், ஸ்னோவர் தில்லான் உள்ளிட்ட ஒன்பது பேர் வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ளனர்.
இவர்களோடு, ஆர்மேனியா, அஜர்பைஜான், மலேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், இந்தோனேஷியா உட்பட 14 நாடுகளில் முக்கிய வழக்குகளில் தேடப்படும் 28 தாதாக்கள் பதுங்கியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.