தேனி மாவட்டத்திலிருந்து அதிக அளவில் சட்டவிரோதமாக மண், கல் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவுக்கு குமுளி, கம்பம், போடிமெட்டு வழியாக கடத்தப்படுவதற்கு கனிமவளத்துறை அதிகாரிகளே ஆதரவாகச் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கனிமவளத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் எம் சாண்டு கிரசர், கல்குவாரி, மணல்குவாரி போன்றவற்றுக்கு அனுமதி வழங்கி வருகின்றனர். அதன்படி தேனி மாவட்டத்திலுள்ள தாலுகா பகுகளில் கனிமவளத்துறை வழங்கிய நடைச்சீட்டைப் பயன்படுத்தி செம்மண், மண், கிராவல் போன்ற கனிமங்களை டிராக்டர், டிப்பர், லாரி போன்ற வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆண்டிபட்டி அருகே செயல்படும் மணல்குவாரியில், மண் அள்ளுவதற்காக வழங்கிய அனுமதி நடைச்சீட்டை மீண்டும், மீண்டும் பயன்படுத்த நடைச்சீட்டின் எழுத்துகளை தீக்குச்சி மூலம் அழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இவ்வாறு நடைச்சீட்டுகளில் எழுத்துகள் அழிக்கப்பட்டு தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ஜக்கம்மாள்பட்டி, கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி என மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
“இப்படி நூதன முறையில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் திருட்டால் அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.