
நடிகர் அஜித்குமாரின் தந்தை மணி என்கிற சுப்பிரமணியம் உடல்நல குறைவால் சென்னையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 84. கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். சிலர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜூ அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது.
அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. ‘எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை’ அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!” எனக் குறிப்பிட்டுள்ளார்.