புதுடெல்லி: நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் இன்று (ஏப்.3) காலையில் நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. இந்தநிலையில் இரண்டு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றம் திங்கள் கிழமைக் காலையில் கூடியது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் நீண்ட நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்து கடந்த மார்ச் 29 ஆம் தேதி காலமான பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பாபட்-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் அவை கூடியதும் பல்லூயிர் பெருக்கம் (திருத்தம்) 2022 மசோதா விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மாநிலங்களவை திங்கள் கிழமை காலையில் கூடியதும், அன்றைய அலுவல்களைப் பட்டியலிடும்படி மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் அழைப்பு விடுத்தார். ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், மோடி, அதானி பெயர்களைக் கூறி முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டக்கூட்டத் தொடர் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது . கூட்டம் தொடங்கிய நாள் முதல் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த முறை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதிலிருந்து இரண்டு அவைகளிலும் எந்த முக்கியமான விவாதங்களும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.