சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ரி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ரி20 போட்டி ஓக்லேன்ட் நகரின் ஈடன் பார்க் அரங்கில் ஆரம்பமாகியது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க 41 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 45 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 53 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றிருந்தனர்.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 197 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் போட்டி சமநிலை அடைய ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
தொடர்ந்து சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 09 ஓட்டங்களை போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இரண்டு பந்துகளில் 13 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலைப் அடைந்திருக்கிறது.
இதேவேளை போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சரித் அசலன்க தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்ததாக நியூசிலாந்து – இலங்கை அணிகள் பங்கெடுக்கும் ரி20 தொடரின் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் (05) டனடின் நகரில் நடைபெறவுள்ளது.