பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நெகமம் மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் காட்டன் சேலை தயாரிக்கும் பணி அதிகளவு உள்ளது. அதிலும், கைத்தறி மூலம் காட்டன் தயாப்புக்கு நல்ல வரவேற்பும், உள்ளது. அதிலும்கோடை காலத்தில் பெண்கள் விரும்பி அணியும் கைத்தறி நெசவு சேலைக்கு கூடுதல் வரவேற்பு உள்ளது. எட்டுகஜம் நூல்சேலை முதல், பெண்களுக்கான நாகரிகமான காட்டன் சேலைகளும் நெகமத்தில் உற்பத்தியாவதுடன், அவை சென்னை திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இத்தகைய புகழ்பெற்ற நெகமம் காட்டன் சேலைக்கு, ஒன்றிய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது, நெசவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, காட்டன்சேலை உற்பத்தியாளர் கேஎம் நாகராஜன் கூறுகையில், ‘கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், ஏராளமானோர் கடந்த 100ஆண்டுகளுக்கு மேலாக, கைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர். இதில் அதிகளவு உற்பத்தியாவது, கட்டன் சேலைகளேயாகும். இப்பகுதியில் ஏற்கனவே பெருமளவு காட்டன் சேலை விற்பனை செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நெகமம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மிகபெரிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு கேட்டு பலமுறைவிண்ணப்பித்தும் இதுவரை கிடைக்காமல் இருந்துள்ளது. தற்போது புவிசார் குறியீடு கிடைக்கபெற்றது, மிகவும் வரவேற்ககூடியதாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், கைத்தறி நெசவாளர்களின் தொழில் மிகவும் மோசமாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. மேலும், சேலை விற்பனை சரிந்து நெசவாளர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையை மாற்றியமைத்திட, நெகமம் காட்டன் சேலைக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள புவிசார் குறியீடு நிச்சயமாக உதவிபுரியும் என்ற எண்ணம் நெசவாளர்களிடையே மேலோங்கியுள்ளது. புவிசார் குறியீடு அறிவித்ததற்கு பிறகு, கைத்தறி நெசவாளர் தொழிலில் நல்ல முறையில் உற்பத்தியும் விற்பனையும் நல்ல முறையில் நடைபெறும் என்ற எதிர்பாத்துள்ளனர்.எனவே, நெகமம் காட்டன் சேலைக்கு புவிசார் குறியீடு அறிவித்ததற்கு, தமிழக கைத்தறி நெசவாளர்கள் சர்பிலும், திமுக நெசவாளர் அணி சர்பிலும் நன்றி’ என்றார்.