பாஜக கூட்டணி… திமுகவின் திராவிட மாடல்… ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் எடப்பாடி!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, முதல்முறை தனது சொந்த ஊரான சேலத்திற்கு

நேற்று மாலை வருகை புரிந்தார். அப்போது மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மணி மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார்.

அதிமுக எழுச்சி

அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கட்சி தொண்டர்கள் அனைவரும் மிகவும் எழுச்சியுடன் இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை அதிமுக, பாஜக கூட்டணி குறித்து முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள தேசிய தலைவர்கள் தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தான் கூட்டணியை முடிவு செய்வர்.

பாஜக கூட்டணி

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது பற்றி டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வரும் என எதிர்பார்க்கிறோம் எனக் கூறினார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்திலிருந்து இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு இணைவது அவரவர் ஜனநாயக உரிமை.

எம்.ஜி.ஆர் கண்ட சோதனைகள்

அதிமுகவை தொடங்கும் போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் எவ்வளவு சோதனைகளை சந்தித்தார் என்று அனைவருக்கும் தெரியும். அவரது மறைவிற்கு பின்னர் இதய தெய்வம் ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை சந்தித்தார். இதேபோல் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிமுக சோதனைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறது. இறுதியில் வெற்றி பெற்றுவிட்டது என்றார்.

எடப்பாடிக்கு வரவேற்பு

நேற்றைய தினம் சேலம் அதிமுகவின் வரவேற்பை அடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு எதிர்கட்சிகளே இருக்கக் கூடாது என திமுக அரசு நினைக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் அதிமுக ஒரு போதும் அஞ்சாது. காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

ஓராயிரம் ஸ்டாலின்கள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளை அழிக்க வேண்டும். ஒழிக்க வேண்டும் என திமுக நினைக்கிறது. அவர்களின் எண்ணம் கானல் நீர் ஆகும். வழக்கு மேல் வழக்கு போட்டாலும் எதிர்நீச்சல் போட்டு அதனை தவிடுபொடி ஆக்குவோம். ஒரு

அல்ல ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று பேசினார்.

திமுக ஆட்சியில் மின் தடை

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. அதேபோல மின் தடையும் ஆரம்பமாகிவிட்டது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்தடை என்பது தவிர்க்க முடியாது. அந்த அளவிற்கு ஆட்சியின் அவலம் இருக்கிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

முதியவர்கள் தனிமையில் இருப்பவர்களை குறிவைத்து கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும், மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் போதை பொருட்களால் சீரழியும் சம்பவங்களும் அதிகரித்து விட்டன. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதற்கெல்லாம் முடிவு கட்ட வரும் மக்களவை தேர்தலில் 40க்கு 40 என வெற்றி வாகை சூடுவோம். அதற்காக அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு பாடுபட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.