சென்னை: கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் நடைபெற்றுவந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆரம்பமானது. அதில் சுமார் 8 லட்சம் மாணவி மாணவர்கள் பங்கேற்றனர். இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு
கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளுடன் நிறைவு பெறுகிறது.
எத்தனை மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர்?
மாணவ-மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் சிறை கைதிகள் என சுமார் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதியுள்ளனர்.
– மாணவர்கள் எண்ணிக்கை -4 லட்சத்து 03 ஆயிரத்து 156 பேர்
– மாணவிகளின் எண்ணிக்கை – 4 லடசத்து 33 ஆயிரத்து 436 பேர்
– மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை – 5 ஆயிரத்து 206 பேர்
– தனித்தேர்வர்கள் எண்ணிக்கை – 23 ஆயிரத்து 747 பேர்
– மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை – 6 பேர்
– சிறை கைதிகள் எண்ணிக்கை – 90 பேர்
இன்று பள்ளி கடைசி நாள்
பொதுத்தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் இன்று பிரிவு உபசார விழாக்கள் நடைபெற்றன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக காணப்பட்டனர்.
விடைத்தாள் திருத்தும் பணி எப்பொழுது?
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதியாக மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்விதுறை முடிவு செய்துள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்பொழுது?
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்வார்கள்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
– ஏப்ரல் 6 ஆம் தேதி: மொழித்தாள்
– ஏப்ரல் 10 ஆம் தேதி: ஆங்கிலம்
– ஏப்ரல் 13 ஆம் தேதி: கணிதம்
– ஏப்ரல் 15 ஆம் தேதி: விருப்ப மொழித்தாள்
– ஏப்ரல் 17 ஆம் தேதி: அறிவியல்
– ஏப்ரல் 20 ஆம் தேதி: சமூக அறிவியல்