பெங்களூரு,
கர்நாடகா சட்டசபை தேர்தலில், முக்கிய பிரமுகர்களுக்கு, ‘சீட்’ வழங்கக் கோரி, அவர்களுடைய ஆதரவாளர்கள் பூச்சிக்கொல்லி மருந்துடன், காங்., அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு மே 10ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 124 தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். விரைவில், இரண்டாவது பட்டியலை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற விரும்பும் முக்கிய பிரமுகர்கள், தங்களது ஆதரவாளர்களை பெங்களூருக்கு அனுப்பி வைத்து, சீட் கேட்டு போராட வைத்துள்ளனர்.
அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குழு கூட்டத்துக்கு மாநில தலைவர் சிவகுமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் வந்தனர். அவர்களின் காரை மறித்த, மொளகால்மூரு தொகுதியில் சீட் கேட்டுள்ள யோகேஷ் பாபுவின் ஆதரவாளர்கள், தங்கள் தலைவருக்கு சீட் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
சிலர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களில் சிலர், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை கைகளில் வைத்திருந்ததுடன், தங்கள் தலைவருக்கு சீட் தரவில்லையென்றால் மருந்தை குடித்து உயிரை விடுவோம் என மிரட்டினர். அவர்களை போலீசார் தடுத்து, பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.
Advertisement