\"போய் லவ் பண்ணுங்கப்பா..\" காதலிக்க ஒரு வாரம் விடுமுறை அறிவித்த சீன கல்லூரிகள்.. இளசுகள் குதுகலம்

பெய்ஜிங்: சீனாவில் இப்போது பிறப்பு விகிதம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. இதனால் சீன பொருளாதாரமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், சீன கல்லூரிகள் லவ் ஹாலிடேஸை அறிவித்துள்ளன.

உலகில் மக்கள்தொகை அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் சீனா டாப்பில் இருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பு என்பதை இத்தனை ஆண்டுகள் அவர்கள் அதைப் பெரிய பிரச்சினையாகவே கருதினர்.

ஒரு வழியாக இப்போது அங்கே மக்கள்தொகை குறையத் தொடங்கியுள்ள நிலையில், 180 டிகிரி யுடர்ன் போட்டு இப்போது மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்,

சீனா

இத்தனை காலம் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. உலகின் அனைத்து நாடுகளைக் காட்டிலும் சீனாவில் மிகக் கடுமையான மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன. குடும்பத்திற்கு ஒரு பிள்ளையை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கடுமையான கட்டுப்பாடாகக் கொண்டு வரப்பட்டது. அதிக குழந்தை பெறுவோருக்கு அரசு வழங்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. பல ஆண்டுகளாக இந்த விதிமுறையை அவர்கள் அமலில் வைத்திருந்தனர்.

 மக்கள்தொகை

மக்கள்தொகை

இதன் விளைவாக அங்கே மக்கள்தொகை சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்தது. ஆனால், இப்போது தான் அவர்கள் மக்கள்தொகை குறைவதால் ஏற்படும் பிரச்சினையைப் புரிந்து கொண்டுள்ளனர். புதிதாகக் குழந்தைகள் பிறப்பது குறைந்தால், நாட்டில் வேலை செய்யும் வயதில் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும். மறுபுறம், இப்போது சராசரி வயது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், உழைக்கும் மக்களின் விகிதம் குறையும். இதனால் நாட்டின் பொருளாதாரமே மிகப் பெரிய ஆபத்தில் தள்ளப்படும்.

 லவ் விடுமுறை

லவ் விடுமுறை

இதன் காரணமாக இப்போது சீனா தனது பாலியில் யூடர்ன் போட்டு, அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்குவித்து வருகின்றனர். முதலில் அதிக குழந்தைகளைப் பெற்றால், அரசு சலுகைகள் கிடைக்காது என்று சொன்ன அதே சீன அரசு, இப்போது இளம் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. இதற்கிடையே அங்குள்ள சில கல்லூரிகள் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் லவ் விடுமுறைகளை அறிவித்துள்ளனர். இதன் மூலம் மக்கள்தொகை குறைவதைக் காப்பாற்ற முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

 காதலிக்க விடுமுறை

காதலிக்க விடுமுறை

இதுவரை அங்குள்ள ஒன்பது கல்லூரிகள் இந்த தனித்துவமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். தங்கள் மாணவர்கள் காதலிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளனர். முதலில் அங்குள்ள மியான்யாங் தொழிற்கல்லூரி தான் இந்த விடுமுறையை அறிவித்தனர். ஸ்பிரிங் பிரேக் பிறகு காதலில் கவனம் செலுத்த ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும் கற்றுக் கொள்ள விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 வெளியே போங்க

வெளியே போங்க

இது குறித்து கல்லூரி சார்பில் கூறுகையில், “மாணவர்கள் வெளியே செல்ல வேண்டும்.. இயற்கைக் காட்சிகளை ரசிக்க வேண்டும். நீர்நிலைகள், மலைகளை ரசிக்கலாம். இவை மாணவர்களின் எல்லைகளை விரிவுபடுத்த உதவும். இது அவர்களின் உணர்வுகளையும் வளர்ப்பது மட்டுமல்லாமல், வகுப்பறையில் அவர்களின் செயல்பாடுகளை உயர்த்தவும் உதவும்” என்று தெரிவித்தார். வெளியே செல்வதைப் போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும், அது குறித்துக் குறிப்பு எழுத வேண்டும் என்ற ஹோம் ஒர்க்கும் கொடுத்துள்ளனர்.

 பிறப்பு விகிதம்

பிறப்பு விகிதம்

பிறப்பு விகிதம் குறையும் நிலையில், அதைச் சரி செய்யும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. இது மக்கள்தொகை குறைவதைச் சற்று தாமதமாக்கும் என்று வல்லுநர்களும் கூறுகின்றனர். இருப்பினும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இது போதாது என்றும் இதற்காக வல்லுநர்கள் 20+ பரிந்துரைகளையும் கொடுத்துள்ளது. 1980 மற்றும் 2015 வரை அங்கே ஒரு குழந்தை கொள்கை அமலில் இருந்தது. சீனாவின் மக்கள்தொகை சரிவுக்கு இதுவே ஒரே காரணம். இப்போது சீனாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 6.77 ஆகக் குறைந்துள்ளது. வரலாற்றிலேயே இது தான் மிகக் குறைவு.

 பயன் தருமா

பயன் தருமா

மக்கள் தொகை பிரச்சினையைக் கடைசியாகப் புரிந்து கொண்ட சீனா, 2021இல் மூன்று குழந்தைகளைப் பெறலாம் என்று அறிவித்தது. மேலும், பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளத் திருமணம் செய்திருக்க வேண்டும் என்ற விதியையும் தளர்த்தியது. அப்படியிருந்தாலும், கொரோனாவில் அனைவரும் வீட்டில் முடங்கிய காலத்தில் கூட பலரும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. குழந்தை பராமரிப்பு, கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பாலின பாகுபாடு ஆகியவை இதற்குக் காரணமாக உள்ளது. இதைச் சரி செய்ய வரும் காலத்தில் சீன அரசு மேலும் சில ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.