திமுக தேர்தல் அறிக்கையில் அதிகமான கவனம் பெற்ற வாக்குறுதி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதே. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலும் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லையே என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த சூழலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தகுதி வாய்ந்தோருக்கு மட்டும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அனைவருக்கும் வீடு என்றால் வீடு இல்லாதவருக்கு வீடு என்று அர்த்தம், அதேபோல் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்றால், வேலை இல்லாதவருக்கு வேலை வாய்ப்பு என்று அர்த்தம். அந்தவகையில் யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை மிக அவசியமோ அவர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார்.
சுமார் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடி பேர் என்பது பாதிக்கும் குறைவானது. எனவே யார் யாருக்கு வழங்கப்போகிறார்கள் என்பது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்தன.
அரசு ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்கப் பெறாது, அரசு ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படாது, சொந்த வீடு வைத்திருப்பவர்கள், கார் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் வாங்கியவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைத் தொகை திட்டத்துக்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கப்படுவதால் அடுத்த மார்ச் வரை ஏழு மாதங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதம் 1000 கோடி ரூபாய் என்ற வகையில் ஒரு கோடி பேருக்கு இந்த திட்டம் கிடைக்கப்பெறும்.
நிதி நிலைமையை கருத்தில் கொண்டே ஒரு கோடி பேருக்கு என சுருக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஒரு கோடி பேருக்கு எந்த தடங்கலும் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்திவிட்டாலே அது பெரும் சாதனை தான் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாராம். நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால் இடையில் யாரும் கை வைக்க முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவிட்டால் திமுக அரசு மீது மக்களுக்கு மிகுந்த மதிப்பு ஏற்படும், அது மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.