மகாவீரர் ஜெயந்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “இந்தியத் துணைக்கண்டத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்றான சமணத்தின் 24-ஆவது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நன்னாளில் தமிழகத்தில் தொன்றுதொட்டு சமணத்தைப் பின்பற்றி வாழ்ந்து வரும் மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரச குடும்பத்தில் பிறந்தும் செல்வச்செழிப்பைப் புறந்தள்ளி, உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம் என்ற உயர் நல்லறங்களை உலகுக்குப் போதித்தவர் வர்த்தமான மகாவீரர். அவரது பிறந்தநாளை சமண மக்கள் சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக, தமிழகத்தில் முதன்முதலில் அரசு விடுமுறை அறிவித்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான கழக அரசு. 2002ம் ஆண்டு அதனை அதிமுக அரசு நீக்கினாலும், 2006-ம் ஆண்டு ஐந்தாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற தலைவர் கருணாநிதி மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தார்.

சமணர்கள் இந்திய அறிவு மரபுக்குப் பெரும் பங்காற்றியவர்கள் என்பது மட்டுமல்ல, தமிழுக்கும் எத்தனையோ இலக்கிய, இலக்கண நூல்களை இயற்றி இணையற்ற பங்களிப்பை நல்கியவர்கள். இல்லாதோர்க்கு ஈந்து, மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளாக மகாவீரர் ஜெயந்தியைப் போற்றுவோம்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.