“மற்றொரு பொய் வாக்குறுதி” – கலவரம் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு ‘டேட்டா’வுடன் கபில் சிபல் சாடல்

புதுடெல்லி: பாஜக ஆட்சியில் கலவரம் நடக்காது என்ற அமித் ஷாவின் பேச்சு மற்றொரு பொய்யான வாக்குறுதி என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும், மத்தியிலும் சில மாநிலங்களிலும் நடந்த கலவரங்களையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

முன்னதாக, பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தின் ஹிசுவா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர், “வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறட்டும். பிஹாரில் 40-க்கு 40 நாடளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறவும், 2025-ம் ஆண்டு மாநிலத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கவும் உதவி செய்யுங்கள். அதன் பின்னர், இங்கு கலவரக்காரர்களை ஒடுக்கி மாநிலத்தின் நிலைமை தலைகீழாக மாற்றப்படும். பாஜக ஆட்சியில் கலவரங்கள் நடைபெறாது” என்று பேசினார்.

அமித் ஷாவின் இந்தப் பேச்சு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறும்போது, “பாஜக ஆட்சியில் கலவரங்களே நடக்காது என்று மற்றொரு பொய்யான வாக்குறுதியை அமித் ஷா கூறியிருக்கிறார். கடந்த 2014 – 2020 ஆண்டுகளுக்கு இடையில் 5,415 கலவரங்கள் நடந்துள்ளன (என்சிபிஆர் தகவல்) 2019-ம் ஆண்டு மட்டும் உத்தரப் பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 4, மத்தியப் பிரதேசத்தில் 2 என 25 வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன. 2021-ம் ஆண்டு ஹரியாணாவிலும், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் 2022 ஏப்ரலில் அதிக அளவிலான கலவரங்கள் நடந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்கம் மற்றும் பிஹாரில் ராம நவமியை ஒட்டி நடந்த வகுப்புவாத கலவரம் குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.2) கேள்வி எழுப்பியிருந்த கபில் சிபல், இத்தகைய கலவரங்களுக்கு 2024-ம் ஆண்டு தேர்தல் ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

கபில் சிபல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அவர் கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸில் இருந்து வெளியேறி, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு மாநிலங்களவைக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.