சென்னை: முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அவர் கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உட்பட சுமார் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்களில் சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவடைந்தது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொண்டனர். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் யாத்திரையில் பங்கேற்றிருந்தனர். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர் இதுபோன்று அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேரணி செல்வது, பாதயாத்திரை செல்வது போன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
இதையடுத்து அரசியல் தலைவர்கள் இதுபோன்று பயணம் செல்வதாலும், பொது மக்கள் அதிக அளவில் திரள்வதாலும், மிக நெருக்கமான சாலைகளில் கூட்டம் அதிகரிப்பதாலும் சம்பந்தப்பட்ட தலைவர்களின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதை கருத்தில் கொண்டு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
இது தொடர்பாக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிய பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தமிழக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் உள்பட யார் பேரணி, யாத்திரை சென்றாலும் அவர்கள் காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அவர்களின் பயணம் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்த பின்னரே அனுமதி வழங்கப்படும்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தாலோ, பேரணி செல்பவர்களால் பொது மக்களுக்கு இடையூறு இருந்தாலோ நாங்கள் அனுமதி வழங்குவது இல்லை. மத்திய உளவுத்துறை பல்வேறு விவகாரம் தொடர்பாக அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கும். அதை கவனமாக கையாண்டு வருகிறோம்’ என்றனர்.