போரில் நடுநிலை வகித்த லக்ஸம்பெர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு நாடுகளின் பகுதிகளை ஜெர்மனி எதற்காக ஆக்கிரமிக்க வேண்டும்? இதை அறிய அப்போதைய கள நிலவரத்தை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஒரு புறம் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை செர்பியா தரப்பில் அணிவகுக்க, மறுபடியும் ஆஸ்திரியா ஹங்கேரிக்கு ஆதரவாக ஜெர்மனியும் இத்தாலியும் களமிறங்கின.
இவற்றில் ஜெர்மனியின் தோழர்கள் பலவீனமானவர்களாக இருந்தார்கள். ஆஸ்திரியா ஹங்கேரி சாம்ராஜ்யத்திலிருந்த பதினோரு நாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றான செக், தான் தனி நாடாகப் பிரிய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது.
மறுபுறம் செர்புகள் ஆஸ்திரிய சாம்ராஜ்யத்திலிருந்து பிரிந்து செர்பியாவுடன் இணைய வேண்டும் என்று நினைத்தார்கள். ஜெர்மனி அணியிலிருந்த இத்தாலியும் முழுவதும் நம்ப முடியாததாக இருந்தது. எந்தப் போர் நிகழ்ந்தாலும் தான் நடுநிலை வகிக்கப் போவதாக அதற்கு முன் அடிக்கடி கூறிக் கொண்டிருந்த நாடு அது.
பிரிட்டனைப் பொறுத்தவரை அதன் முக்கிய இலக்கு உலகெங்கும் தன் காலனி நாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான். கூடவே ஐரோப்பாவில் தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும். ஜெர்மனி சூப்பர் பவர் ஆகிவிட்டால் இந்தக் கனவு நடக்காமல் போய்விடும்.
பிரான்ஸ் ஜெர்மனிக்கு எதிராகத் திரும்பியதற்கு வேறொரு காரணம் இருந்தது. அது பழி உணர்ச்சி. 1870-71 ஆண்டுகளில் நடைபெற்ற ஜெர்மனிக்கும் பிரான்ஸ்க்குமான போரில் பிரான்ஸ் தோற்றிருந்தது. பிரான்ஸின் முக்கிய நகரங்களில் ஜெர்மனிய சக்கரவர்த்தி படங்கள் இடம்பெற்றதை அது மிகவும் அவமானமாக உணர்ந்தது. அந்தப் போரில், அதாவது 1871ல், தனது அல்ஸெஸ் லோரெய்ன் என்ற பகுதியை ஜெர்மனியிடம் இழந்திருந்தது. அதை மீட்க வேண்டும் என்ற துடிப்பு.
ஜார் வம்சத்தினரால் ஆளப்பட்ட ரஷ்யா தனது உள்நாட்டுக் கலகங்களைச் சரி செய்து கொண்டு தன்னை ஒரு மாபெரும் சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்தது. ஐரோப்பாவில் ஜெர்மனிக்கு வழிவிடாமல் தன் தலைமையை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய நிலைமை அதற்கு.
இந்த நிலையில் ஷ்லியெஃபென் போர் வியூகத்தில் (Schlieffen’s Plan) இறங்கியது ஜெர்மனி. ஷ்லியெஃபென் திட்டம் என்பதை வடிவமைத்தவர், அந்தப் பெயர் கொண்ட ஜெர்மன் கடற்படையில் பணியாற்றியவர். 1905ல் ஜெர்மானியப் பேரரசுக்காக அவர் உருவாக்கிய திட்டம் இது.
இதன்படி பிரான்ஸை நேரடியாகத் தாக்குவதற்குப் பதிலாக ஜெர்மனி தனது ராணுவ வீரர்களை பெல்ஜியத்துக்கு அனுப்பி, அங்குள்ள சில பகுதிகளை வசப்படுத்தி, அங்கிருந்து பிரான்ஸைத் தாக்கும். இதன் மூலம் ஜெர்மனியை பிரான்ஸ் நேரடியாகத் தாக்கினால் அது கடக்க வேண்டிய மலைப்பகுதிகளைத் தவிர்க்கலாம். தவிர அதற்குள் கூட்டு நாடுகளின் ராணுவமும் அவர்களோடு சேர்ந்துகொள்ளுமே!
ஜெர்மன் ராணுவத்தின் தலைவராக 1871 – 1906 வரை பணியாற்றி தனது 79வது வயதில் இறந்தவர் ஷ்லியெஃபென். அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று ஒன்பது வருடங்களுக்குப் பிறகுதான் முதலாம் உலகப் போர் தொடங்கியது. என்றாலும் அவரது போர்த் திட்டத்தைத் தூசு தட்டி எடுத்துச் செயல்படுத்தத் தொடங்கியது ஜெர்மனி.
தவிரத் தாக்குப் பிடிப்பதை விடத் தாக்குவது என்பது சிறந்த போர் யுக்தி என்று கருதினார் ஜெர்மனியின் ஃபீல்டு மார்ஷலான வோன் மோல்ட்கே (Von Moltke).
ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் அதற்கு முன் நடைபெற்ற திட்டத்தில் ஜப்பான் வென்றதற்குக் காரணம் அது எப்போதுமே ஆக்கிரமிப்பையும் தாக்குதலையும் முதன்முதலாக முன்னெடுத்ததுதான் என்பதே இதன் பின்னணி.
ஜெர்மனி இப்படி யோசித்தது. ‘பிரான்சும் ரஷ்யாவும் நட்பு நாடுகள். நமக்கு எதிரியான இவற்றுக்கு நடுவேதான் நாம் இருக்கிறோம். ஒரே சமயத்தில் இருவரையும் தாக்குவது தவறு. நம் ராணுவம் அதனால் சிதறும். அது எதிரிகளுக்கு எளிதாகி விடும். எனவே அந்த இரு நாடுகளில் ஒன்றை முதலில் தாக்கி வீழ்த்துவோம். மற்றொன்றைக் கண்காணிப்பில் வைத்திருப்போம். பிரான்ஸ் என்கிற ஒரு எதிரியை ஒழித்துவிட்டால் அதன் பிறகுத் தனது ஒட்டுமொத்த ராணுவத்தையும் ரஷ்யாவின் புறம் செலுத்தி அதையும் வீழ்த்த முடியும். அதேசமயம் பிரான்ஸை வீழ்த்த நேரடியாகச் செல்லாமல் நடுநிலை வகித்த பெல்ஜியத்துக்குள் நுழைவோம். அதன் வழியாக பிரான்ஸைத் தாக்குவோம்’.
ஆக, ஒரு பெரிய ஐரோப்பியப் போர் நடந்தே தீரும் என்கிற நிலை உருவானது. ஆனால் அப்போதும் பிரிட்டன் மௌனமாக இருந்தது. ஆனால் சீக்கிரமே பிரிட்டனும் போரில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.