மும்பை: 2 சிறுமிகளுடன் பைக்கில் சாகசம் செய்ததாக மும்பையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இளைஞர்கள் பாதுகாப்பற்ற முறையில் பைக் சாகசங்களை செய்து வருகிறார்கள். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் பயணிப்போருக்கும் ஆபத்தான வகையில் முடிகிறது. இது போன்ற சாகசங்களை ஆள் இல்லாத வழித்தடத்தில் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும்.
ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை. இளைஞர்கள் விலீங் செய்கிறார்கள். ஆட்டோவில் கூட வீலிங் செய்கிறார்கள். கிழக்கு கடற்கரை சாலை மட்டுமல்லாமல் பிஸியான சாலைகளிலும் கூட வாகனங்கள் சர்ர்… விர்… என செல்வதுண்டு.
எச்சரிக்கை
போலீஸார் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் தவறு செய்வோர் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தை பிடித்தவாறே பயணிப்பது, ஒரு பைக் மீது கால் வைத்தபடியே இன்னொரு பைக்கில் செல்வது போன்ற சாகசங்களையும் இளைஞர்கள் செய்கிறார்கள். பொது இடங்களில் இது போன்று சாகசங்களை செய்யும் சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு இளைஞர் இரு சிறுமிளை பைக்கில் அமர வைத்துக் கொண்டு வீலிங் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. முன் பகுதியில் ஒரு சிறுமி, பின் பகுதியில் ஒரு சிறுமி என உட்காரவைத்தபடியே அவர் வீலிங் செய்திருந்தார். இந்த சாகச வீலிங் வீடியோ வைரலானது. அப்படியே போலீஸாரின் கடைக்கண்களையும் அடைந்தது.
விசாரணைக்கு உத்தரவு
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த வீடியோவில் அந்த இளைஞர் இரு பெண்களையும் அமர வைத்துக் கொண்டு வேகமாக வண்டியை ஓட்டுகிறார். மூன்று பேருமே ஹெல்மெட் அணியவில்லை. முன் பகுதியில் அந்த இளைஞரின் பார்வையை மறைக்கும் வகையில் அந்த பெண் அமர்ந்திருந்தார். அந்த இளைஞரோ வண்டியில் ஆபத்தான முறையில் டிரிபிள்ஸ் சென்றது இல்லாமல் சக்கரத்தை உயரத் தூக்கி அபாயமான முறையில் வீலிங் செய்திருந்தார்.
இளைஞர் கைது
இந்த இளைஞரை மும்பை போலீஸார் தேடி வந்தனர். அந்த இளைஞர் மீது மட்டுமல்லால் அதில் உட்கார்ந்திருந்த இரு சிறுமிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இளைஞரின் இருப்பிடம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் மூலம் இளைஞரின் இருப்பிடத்தை அறிந்த போலீஸார் அவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் காதலன் முன்பு காதலி இரு சக்கர வாகனத்தில் எதிரெதிரே அமர்ந்து கொண்டு முத்தம் கொடுத்தபடியே பயணித்த சம்பவமும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இது போல் அநாகரீமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளை போலீஸார் பிடித்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.