இரு சக்கர வாகனத்தில் வாலிபர்கள் அடிக்கடி சாகசத்தில் ஈடுபடுவதை பார்த்து இருக்கிறோம். போலீஸாரின் கண்டிப்புகளையும் மீறி இது அவ்வப்போது தொடர்கிறது. மும்பையில் இரண்டு நாள்களுக்கு முன்பு பாந்த்ரா பகுதியில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தனக்கு முன்பாக ஒரு பெண்ணும் பின் இருக்கையில் ஒரு பெண்ணையும் வைத்துக்கொண்டு ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்றார். அதோடு முன்பகுதியில் இருந்த பெண் பைக் ஓட்டுபவரை கட்டிக்கொண்டிருந்தார். அந்த வாலிபர் இரு சக்கர வாகனத்தில் சாகத்திலும் ஈடுபட்டார்.

ஒரு சக்கரத்தில் வண்டியை ஓட்டி சாகசம் செய்தார். இதனை சமூக ஆர்வலர் முஸ்தாக் அன்சாரி என்பவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. உடனே அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் பாந்த்ரா-குர்லா போலீஸார் ஈடுபட்டனர். விசாரணையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பதை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர். அவர் வடாலா பகுதியை சேர்ந்த பயாஸ் கத்ரி(24) என்று தெரிய வந்தது.
அவரின் வீட்டு முகவரியில் தேடிச்சென்ற போது அவர் அங்கு இல்லை. அவரின் மொபைல் போன் மூலம் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர். இறுதியில் சாக்கிநாக்கா என்ற இடத்தில் ரெய்டு நடத்தி அவரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து துணை கமிஷனர் தீக்ஷித் கூறுகையில்,` “கைது செய்யப்பட்டுள்ள பயாஸ் கத்ரி மீது ஏற்கனவே வடாலா போலீஸ் நிலையத்தில் வழக்கு இருக்கிறது. அவர் அடிக்கடி முகவரியை மாற்றி கைதில் இருந்து தப்பித்து வந்தார். மேலும், அவருடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.