கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ராம் நவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக வன்முறை ஏற்பட்டு வருகிறது. இது மம்தாவுக்கு மிகக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
நாடு முழுக்க ராம் நவமியை முன்னிட்டு பல இடங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி மேற்கு வங்கத்தில் நடைபெறும் ஊர்வலங்களில் வன்முறை ஏற்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலில் அங்கே ஹவுரா பகுதியில் ராம நவமி ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதையடுத்து அங்கே போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
வன்முறை
இதனிடையே ஹூக்ளி என்ற பகுதியில் ராம் நவமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாஜகவின் திலீப் கோஷ் கலந்து கொண்டனர். அப்போது பேரணியை நோக்கி சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் சாகர்டிகியில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் தோல்வியடைந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது மாநிலத்தில் இடங்களில் வகுப்புவாத வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.
மம்தா தர்ணா
மேற்கு வங்கத்திற்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை, புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு திரிணாமுல் தலைவர்களைக் குறிவைப்பது ஆகியவற்றைக் கண்டித்து ஆளும் மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தான், இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இது மம்தாவின் போராட்டத்தில் இருந்து விஷயத்தைத் திசைதிருப்புவதாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரசும் பாஜகவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மம்தா
இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து மம்தா கூறுகையில், “பாஜகவினர் திட்டமிட்டு வகுப்புவாத கலவரங்களை நடத்த வெளி மாநிலங்களில் இருந்து முரடர்களைக் கொண்டு வந்துள்ளனர். அவர்களின் ஊர்வலங்களை யாரும் நிறுத்தவில்லை. ஆனால் கத்தி வாள்கள் மற்றும் புல்டோசர்களுடன் ஊர்வலம் செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை. ஹவுராவில் இந்த வன்முறை நடத்த அவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது என்று கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக ஒரு சமூகத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கேற்ப பேரணியையும் மாற்றியுள்ளனர்” என்றார்.
பதற்றம்
இருப்பினும், வன்முறையைக் கண்ட ஹவுராவில், கடந்த ஆண்டு ராம நவமி போதும் இதேபோல வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. அப்போது முதலே அந்த பகுதி பதற்றமாகவே இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. நிலைமை இப்படியிருக்கும் போது, நிலைமை சமாளிக்க மேற்கு வங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலரும் விமர்சித்துள்ளனர். ராம நவமி என்ற பெயரில் எந்தவொரு வகுப்புவாத வன்முறையையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று முன்பே மம்தா எச்சரித்திருந்தார். இருப்பினும், அதேதான் இப்போது நடந்துள்ளது.
திரிணாமுலுக்கு ஆபத்து
மைனாரிட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது என்ற பிம்பம் ஏற்பட்டால், சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் நழுவிப் போகும் எனக் கட்சி கவலைப்படுவதாக மூத்த திரிணாமுல் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “சிறுபான்மையினர் பாஜகவைக் கண்டு பயப்படுகிறார்கள்.. சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் வலுவாக இருந்த அனைத்து சிறுபான்மை பகுதிகளிலும் நாங்கள் இடங்களைப் பெற்றுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
பின்னடைவு
சிறுபான்மையினரின் வாக்குகள் சற்றே குறைந்தாலும் கூட, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் தலைவர்கள் மீதான வழக்குகள் காரணமாக திரிணாமுல் கட்சிக்கு மோசமான பாதிப்பு ஏற்படக் கூடும். சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் சாகர்டிகி இடைத்தேர்தலிலேயே திரிணாமுல் தோல்வியடைந்துள்ளது அவர்களை யோசிக்க வைத்துள்ளது. இதன் காரணமாகவே திரிணாமுல் அரசு சிறுபான்மையினருக்கான தனி மேம்பாட்டு வாரியத்தை அறிவித்துள்ளது. அரசு இப்படி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மைனாரிட்டி மீதான தாக்குதல் திரிணாமுல் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
சிபிஎம் பக்கம் சாயும் மைனாரிட்டி
சிபிஎம் ஆட்சியில் இதுபோல எந்தவொரு வன்முறை சம்பங்களும் நடந்ததே இல்லை என்று ஒரு தரப்பினர் பேசத் தொடங்கியுள்ளனர். இது திரிணாமுல் கட்சிக்கு நல்ல சிக்னல் இல்லை. கடந்தாண்டு ஹவுராவில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து சிபிஎம் அங்கே ஹவுராவில் அமைதி ஊர்வலத்தை நடத்தியது. அதில் உள்ளூர் திரிணாமுல் தலைவர்கள் கலந்து கொண்ட போதிலும், மூத்த தலைவர்கள் யாரும் இதைக் கொண்டு கொள்ளவில்லை. இந்தச் சூழலில், இப்போது வன்முறைக்குப் பிறகு வங்காள கூட்டுறவு அமைச்சர் அருப் ராய், அங்கே சென்ற போது அவரது காரை சூறையாடினர். பாஜக மற்றும் சிபிஐ(எம்) ஆகிய இரு கட்சிகளும் இதை தங்களுக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.
கடும் தாக்கு
ஹவுரா வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க விடாமல் தன்னை தடுத்து நிறுத்துவதாகச் சாடியுள்ள அம்மாநில பாஜகவின் சுகந்தா மஜும்தார், ஆளும் தரப்பு பக்க சார்புடன் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், முதல்வர் அனைவருக்குமானவராக இருக்க வேண்டும்.. ஆனால், அவர், ஒரு மதத்தினருக்காக மட்டுமே பணியாற்றுகிறார்” என்று கடுமையாகச் சாடியுள்ளார். உளவுத் துறை தோல்வியடைந்துவிட்டதாகச் சாடியுள்ள சிபிஎம் தலைவர் சுஜன் சக்ரவர்த்தி, பாஜக மற்றும் திரிணாமுல் என இரு கட்சிகளும் சமூகத்தைப் பிளவுபடுத்துவதாகவும் இருப்பினும் இந்த அரசியலை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சாடியுள்ளார்.