ராகுல் காந்தி மேல்முறையீடு: தண்டனை ரத்தாகுமா? சூரத்தை நோக்கி திரும்பும் கவனம்!

ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலாரில்
காங்கிரஸ்
கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்’ எனக் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தியின் பேச்சு பாஜகவினரை மிகுந்த கோபமடைய செய்தது. குறிப்பாக பிரதமர் மோடிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டினர். உடனே ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி சூரத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்திய தண்டனை சட்டப் பிரிவு 499, 500ன் கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி என உத்தரவிடப்பட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேசமயம் 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று அனுமதி வழங்கி, கூடவே ஜாமீனும் வழங்கியது. தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தியும் வைக்கப்பட்டது.

குற்ற வழக்கில் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. இரு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்படுகிறபோது, அவர்களது பதவி உடனே பறிக்கப்பட வேண்டும். அதன்படி, 2 ஆண்டு தண்டனை தீர்ப்பு வந்த மறுநாளே ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இந்த தண்டனை தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உடனடியாக சட்ட நிவாரணம் தேடி மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அது தாமதமாகி வந்த நிலையில் இன்று தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீதிமன்றம் அவரது தண்டனை தீர்ப்புக்கு தடை கொடுத்தால் அவரது எம்.பி பதவி மீண்டும் அவரிடம் கொடுக்கப்படும். தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்றால் அவர் எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் சூரத்தை நோக்கி திரும்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.