ராகுல் காந்தி வழக்கில் மர்மம்… கோலார் டூ சூரத்… 163 ஆண்டுகால வரலாற்று அதிசயம்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், 2019 ஏப்ரல் 13 அன்று கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

புர்னேஷ் மோடி வழக்கு

ஏப்ரல் 16 அன்று புர்னேஷ் மோடி என்ற பாஜக பிரமுகர் குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடர்கிறார். கோலாருக்கும், சூரத்திற்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. இந்த வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. விரைவாக விசாரிக்க வேண்டும். தண்டனை வாங்கி தர வேண்டும் என்று புகார்தாரர் புர்னேஷ் மோடி எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

ராகுல் காந்தி மீது அவதூறு

2022 மார்ச் மாதம் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தன்னுடைய வழக்கை விசாரிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்கிறார். இப்படி ஒரு வினோதத்தை எங்கும் கண்டதில்லை. இதை ஏற்று வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கிறது. 2022 மார்ச் முதல் 2023 பிப்ரவரி வரை நீதிமன்றத்தின் தடை நீடிக்கிறது. இதற்கிடையில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றப்படுகிறார்.

எப்படி நடந்தது?

புதிய நீதிபதி பொறுப்பேற்கிறார். 2023 பிப்ரவரி 7 அன்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் அதானி நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இவற்றில் 90 சதவீத விஷயங்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுகின்றனர். அடுத்த 9 நாட்களில் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு சென்ற புர்னேஷ் மோடி, எனது வழக்கு மீதான தடையை நீக்கி விசாரணை நடத்தலாம் எனக் கேட்கிறார்.

சிறை தண்டனை

நீதிமன்றமும் அனுமதி அளிக்கிறது. பிப்ரவரி 21ஆம் தேதி மீண்டும் விசாரணை தொடங்குகிறது. சரியாக 30 நாட்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி அன்று 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து மறுநாள் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவரது எம்.பி பதவி பறிக்கப்படுகிறது. எந்த கிரிமினல் வழக்கு 30 நாட்களில் விசாரித்து முடிக்கப்பட்டிருக்கிறது.

யார் கையெழுத்து

இதற்கு முன்பு சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கே கிடையாது. அவை எல்லாம் என்னவாயிற்று? ராகுல் காந்தி வழக்கை மட்டும் ஏன் அவசர அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கினர். இதில் மற்றொரு ட்விஸ்டும் இருக்கிறது. ராகுல் காந்திக்கு தண்டனையை நிறுத்தி வைத்து அதே நீதிபதி உத்தரவிடுகிறார். மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் யார் கையெழுத்து போட்டார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.

வரலாறு காணாத அதிசயம்

தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யவில்லை. குடியரசு தலைவரிடமும் அனுமதி பெறவில்லை. இதுதான் வழக்கின் நிலை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய குற்றவியல் சட்டம் நிறைவேற்றப்பட்ட 163 ஆண்டுகளில் எந்த வழக்கிலும் வாய் மொழி அவதூறுக்கு அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை வழங்கியதே கிடையாது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.