புதுடெல்லி: நீதித் துறைக்கு காங்கிரஸ் கட்சி தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்க முயல்வதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி மேல்முறையீடு: மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நிலையில், அந்த தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று நேரில் மேல்முறையீடு செய்யவுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோருடன் சென்று அவர் மேல்முறையீடு செய்யவுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் கண்டனம்: இதை கண்டித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு , நீதித் துறை மீது காங்கிரஸ் கட்சி தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்க முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார். நீதித் துறையை அச்சுறுத்தும் நோக்கில் அவர்கள் நாடகம் நடத்திக்கொண்டிருப்பதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டைவிட ஒரு குடும்பம் மேலானது என்று காங்கிரஸ் கட்சி கருதுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியின் மேல்முறையீடு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறைக்குப் போனபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எத்தனை பேர் உடன் சென்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் முதல்வர்கள் விளக்கம்: பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், ”நான் எனது தலைவருடன் (ராகுல் காந்தி) செல்கிறேன். இது எப்படி நீதித் துறைக்கு அழுத்தத்தை கொடுப்பதாக ஆகும்? (ராம நவமி ஊர்வலத்தில் நிகழ்ந்த கலவரங்களின் மூலம்) மேற்கு வங்கத்திலும், பிஹாரிலும் பாஜகவினர் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ இதுவரை மக்களுக்கு எந்த ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
”நீதித் துறைக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. காங்கிரஸ் மிகப் பெரிய எதிர்க்கட்சி. ராகுல் காந்தி நாட்டின் மிகப் பெரிய தலைவர். ராகுல் காந்தியோடு நாங்கள் செல்வது அரசியல் நாடகமல்ல. நாங்கள் அவரோடு இருக்கிறோம்” என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.