புதுடில்லி, ‘மேற்கு வங்கத்தில் ராமநவமியின்போது நடந்த வன்முறை தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் வலியுறுத்திஉள்ளனர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் ராமநவமியை முன்னிட்டு, ஊர்வலங்களை பா.ஜ., நடத்தியது. அப்போது, ஹூக்ளி, ஹவுரா, வடக்கு தினாஜ்புர் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இவை குறித்து, பா.ஜ., வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் லாக்கெட் சாட்டர்ஜி, ஜகன்னாத் சர்கார் உள்ளிட்டோர் புதுடில்லியில் நேற்று கூறியதாவது:
இந்த வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாகும். முஸ்லிம் மக்களின் ஓட்டுக்காக, அந்த மக்கள் வன்முறையில் ஈடுபட, மம்தா பானர்ஜி துாண்டி விட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
வன்முறைகளுக்கு பொறுப்பேற்று, மம்தா பானர்ஜி, முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். மேற்கு வங்க மாநிலம், பழைய ஜம்மு – காஷ்மீராக மாறி வருகிறது. அங்கு சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.