திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். மகுடஞ்சாவடியில் செல்வகணபதி தலைமையிலும், ஆட்டையாம்பட்டியில் எஸ்ஆர் சிவலிங்கம் தலைமையிலும், கன்னங்குறிச்சியில் ராஜேந்திரன் தலைமையிலும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கடந்த 2 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செய்து கொடுதிருப்பதாக தெரிவித்தார்.
12 கோடி பேருக்கு உரிமைத் தொகை
விரைவில் ஒரு லட்சம் பேர் பயன் அடையும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்திற்கு வர உள்ளார். இந்த அரசு விழாவில், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நலன் பெரும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். குறிப்பாக ஒரு கோடி பெண்களுக்கு உரிமை தொகை வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், ஆண்டிற்கு 12 கோடி பேருக்கு இந்த உரிமை தொகை வழங்கிட உள்ளதாகவும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவார், வசதி படைத்தவர்களை தவிர ஏழை எளிய நடுத்தர தரப்பு பெண்கள் அனைவருக்கும் இந்த உரிமை தொகையை நிச்சயம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் செய்திடாத பல சாதனைகளை இந்த ஆட்சி செய்து வருவதாகவும் ஆட்சிக்கு எப்பொழுதும் பொதுமக்கள் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் உள்பட ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.