சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் கொடுத்த அதிரிபுதிரி வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் கமல்ஹாசன்.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் கமல்ஹாசன், அடுத்ததாக மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் இணையவுள்ளார். இதுகுறித்து முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். பல சோதனை முயற்சிகளையும் கமர்ஷியல் படங்களையும் கமல் நடிப்பில் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர். இதனிடையே கமலின் வித்தியாசமான நடிப்பை வெளியில் கொண்டுவந்த பெருமையை கடந்த ஆண்டில் தட்டிச் சென்றார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான அவர், கமலை இன்ச் இன்ச்சாக ரசித்து விக்ரம் படத்தை கொடுத்திருந்தார்.

கமலின் விக்ரம் படம்
அவரது முழு உழைப்பிற்கு விக்ரம் படம் சிறப்பான பலனை கொடுத்துள்ளது. படம் சிறப்பான விமர்சனங்களை மட்டுமில்லாமல் வசூலையும் குவித்தது. முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை லோகேஷ் இயக்கியிருந்தாலும், அவரது கேரியரில் பெஸ்ட் படமாக விக்ரம் அமைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய்யை இயக்கி வருகிறார் லோகேஷ். லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் நாளைய தினம் சென்னையில் துவங்கவுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்
விக்ரம் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா, காயத்ரி, மைனா, மகேஸ்வரி என பல நடிகர்களுடன் களமிறங்கிய லோகேஷ், படத்தில் அவர்களை சிறப்பாக பயன்படுத்தினார். சிறிய கேரக்டராக இருந்தாலும் அந்தக் கேரக்டரும் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு, மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. கமலின் பேரனாக நடித்திருந்த குழந்தைகூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை கொண்டாட வைத்தது.

லியோ படத்தை இயக்கும் லோகேஷ்
இந்நிலையில் தற்போது லியோ படத்திலும் அதிகமான நடிகர்களுடன்தான் களமிறங்கியுள்ளார் லோகேஷ். விஜய்க்கு வில்லனாக மட்டுமே 6 பேர் நடித்து வருகின்றனர். இதனிடையே விக்ரம் படம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசனுக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் சமயத்திலேயே படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் கமல்ஹாசன். லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கைதி 2 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த இயக்குநர்களுடன் கமல்
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை லோகேஷ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த பிராஜெக்ட்களில் தன்னை கமிட் செய்து வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் அவர், அடுத்தடுத்து ஹெச் வினோத், மணிரத்னம், பா ரஞ்சித், வெற்றிமாறன் என அடுத்தடுத்த இயக்குநர்களுடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷை விட்டுடாதீங்க
இதனிடையே இதுகுறித்து சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அடுத்தடுத்த இயக்குநர்களுடன் அவரது லைன் அப் மிகவும் பெரிதாக உள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்தப் பட்டியலில் லோகேஷ் கனகராஜை விட்டுட்டீங்களே என்று உடனடியாக கமல் எதிர்கேள்வி கேட்டுள்ளார். லோகேஷ் படத்தின் வெற்றி, கமலை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷுடன் மீண்டும் இணைவது குறித்து அவர் தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகிறார்.