மதுரை மாவட்டத்தில் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்திருந்த ராணுவ வீரர் மகன் கண் முன்னே விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் தர்மலிங்கம் (42). இவரது மனைவி ஜோதி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த தர்மலிங்கம், நேற்று இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் தனது தாயை பார்ப்பதற்காக சென்றார். அப்பொழுது விடத்தக்குளம்-எட்டுநாழி சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த மினி சரக்கு வேன் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தர்மலிங்கம் தனது மகன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மகன் சஞ்சய் பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த தர்மலிங்கனின் உடலை கை பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மினி வேன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.