1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை.. நாளை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்.. திமுகவில் திகு திகு.!

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் வலுவாக இருக்கும் திமுக வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவதே தனது இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் அடுத்த ஜூன் 3ம் தேதிக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திமுக முடிவு செய்துள்ளது. அதற்கான விழாவை திமுக தலைவர் ஸ்டாலின் நாளை தனது சொந்த தொகுதியில் நடத்த உள்ளார்.

இந்தநிலையில் தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் (MK Stalin) இன்று எழுதிய மடலில், ‘‘நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். எத்தகைய கோட்டையாக இருந்தாலும் அடித்தளம் உறுதியாக அமைந்தால்தான் மேலும் மேலும் உயரமாக்கி, வலிமை பெற முடியும். கழகத்தின் அடித்தளமாக இருப்பவர்கள் அதன் அடிப்படைத் தொண்டர்கள்.

எத்தனையோ நெருக்கடிகளில், சோதனைகளில், தோல்விகளில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் எதிர்நீச்சல் போட்டு திமுகவை (Dmk) கட்டிக் காத்தார் என்றால், அந்த எதிர்நீச்சலில் அவருடன் பங்கேற்றவர்கள், கழகத்தின் உண்மையான தொண்டர்கள்தான். தலைவர் கலைஞரால் பதவி சுகம் பெற்றவர்கள்கூட சோதனையான நேரத்தில், அவரைவிட்டு விலகி, மாற்று முகாம்களில் தஞ்சம் அடைந்த நிலையில், எந்நாளும் கருப்பு – சிவப்பு கொடியை ஏந்தி, தலைவர் கலைஞருடன் நின்றவர்கள் தொண்டர்களே! அதனால்தான், கழகத் தொண்டர்களை ‘உடன்பிறப்புகள்’ என்று உறவுச் சொல்லாக்கி, உணர்வோடு அழைத்து மகிழ்ந்தார் முத்தமிழறிஞர்.

அவர் கட்டிக் காத்த திமுகவில் ஒரு கோடி உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். கழகத் தலைவர் என்ற பொறுப்பை சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், கழகத்தின் முதன்மை உடன்பிறப்பு. நம்மைவிட மூத்த உடன்பிறப்பாக கழகப் பொதுச்செயலாளர். இன்னும் எண்ணற்றவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள். இளைய உடன்பிறப்புகளும் இயக்கத்தின் நிறைந்திருக்கிறார்கள். ஆண் – பெண் பேதமின்றி அனைத்து பாலினத்தவருக்கும் இடமளிக்கும் இயக்கம் இது. திருநங்கையரும் உறுப்பினராகி, மக்கள் பிரதிநிதிகளாக உள்ளாட்சி அமைப்புகளில் திறம்பட இயங்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது தலைவர் கலைஞர் கட்டிக் காத்த கழகம்.

முத்தமிழறிஞர் கலைஞருக்கு அவருடைய நூற்றாண்டு தொடக்க விழாவில் நாம் செலுத்தும் நன்றியாக, உடன்பிறப்புகளாம் உறுப்பினர்களை இருமடங்காக்கி, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டவேண்டும் என்று 22-03-2023 அன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தைச் செயலலில் நிறைவேற்றிக் காட்டிட, ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நாளை (ஏப்ரல் 4) முதல் நடைபெறவிருக்கிறது. கொளத்தூர் தொகுதியில் நான் நேரடியாக இதனைத் தொடங்கி வைக்க இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டக் கழக நிர்வாகங்களுக்கும் உட்பட்ட தொகுதிகளில் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளைவாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி முனைப்பாக நடைபெறவிருக்கிறது.

கழகத்தில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களைத் தவிர்த்து, புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விதிமுறைகள் – வழிமுறைகள், தொகுதிவாரியாக உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தலைமைக் கழகத்தால் மாவட்டக் கழகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஒத்துழைப்பு நல்கிடுவதற்காகத் தொகுதிப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் ஒருங்கிணைந்து உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை மேற்கொண்டிட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக உள்ள கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வில் கழக நிர்வாகிகளுடன் இணைந்து பங்கேற்று செயலாற்றிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்திலோ, வார இறுதி நாட்களிலோ, மற்ற விடுமுறை நாட்களிலோ மக்களை நேரடியாக சந்தித்து, இரண்டாண்டுகால கழக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துச் சொல்லி, ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என அன்பழைப்பு விடுத்து, அவர்களின் முழு விருப்பத்துடன் உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும்.

வீடு வீடாகச் சென்று மக்களை சந்தியுங்கள். கொரோனோ பேரிடர் காலத்தில் வழங்கப்பட்ட ரூ.4,000 நிவாரணத் தொகை, மளிகைத் தொகுப்பு, பொங்கல் பரிசுத் தொகை உள்ளிட்டவை மக்களிடம் முறையாகச் சென்று சேர்ந்ததை உறுதி செய்யுங்கள். ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், உழவர்களுக்கு மழை வெள்ள கால நிவாரணம், நெசவாளர்களுக்கு கூடுதல் இலவச மின்சாரம் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்கள் அன்றாடம் நிறைவேற்றப்படுவதை அவர்களிடம் எடுத்துரையுங்கள்.

திமுக

வருகிற செப்டம்பர் 15 முதல் மாதம் ஆயிரம் ரூபாய், ஒரு கோடி குடும்பத் தலைவியருக்கு வழங்கப்பட இருப்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். பெண்களின் சுயமரியாதையைக் காத்திடும் திராவிடக் கருத்தியல் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்த இருப்பதையும் எடுத்துக்கூறுங்கள். ‘நான் முதல்வன்’ திட்டம் வாயிலாக மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு அவர்கள் நல்ல வேலைக்குச் செல்ல வாய்ப்பு அமைவதையும், கடந்த இரண்டாண்டுகளில் தமிழ்நாடு தொழில்துறையில் முன்னேற்றம் பெற்று, புதிய முதலீடுகள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகியிருப்பதையும் விளக்கிச் சொல்லுங்கள்.

பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் கழகத்தின் உறுப்பினராகும் வகையில் உங்களுடைய பரப்புரை அமைய வேண்டும். அதற்கேற்ப துண்டறிக்கைகள் வழங்க வேண்டும். மக்கள் அதிகமாகக் கூடுகிற பகுதிகளிலும் உறுப்பினர் சேர்ப்பு முகாம்களை நடத்தலாம். உறுப்பினர் கட்டணம் பத்து ரூபாய். வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டே உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.

திமுக தொண்டர்கள்

அதனால் புதிய உறுப்பினர் எந்தத் தொகுதியைச் சேர்ந்தவர், அது எந்த கழக மாவட்டத்திற்கு உட்பட்டது, எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தக்கூடியவர் என்பது உள்பட அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இணையவழியாகவும் (www.udanpirappu.com) உறுப்பினராக சேரலாம். அவர்களின் விவரங்களும் மாவட்டக் கழகத்தினரால் சரிபார்க்கப்பட்ட பிறகே உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

இவற்றைக் கவனத்தில் கொண்டு உறுப்பினர் சேர்ப்பு பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டுகிறேன். இரண்டு கோடி உடன்பிறப்புகள் என்ற இலக்குடன் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை இருமடங்காக்கும் புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு அனைத்துப் பகுதிகளிலும் விரைவாகவும் – சரியாகவும் – முழுமையாகவும் நடைபெற வேண்டும்.

உங்களின் முனைப்பான உழைப்பினால் இரண்டு கோடிக்கும் மேலாகக் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கை உங்களில் ஒருவனான எனக்கு முழுமையாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களும், திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயன் பெற்றவர்களும் – பெற இருப்பவர்களும் புதிய உறுப்பினர்களாக விரும்பி இணையும்போது, கழகத்தின் வலிமை பெருகும். அது அடுத்தடுத்த தொடர் வெற்றிகளுக்கு உத்தரவாதத்தை வழங்கும்.

தற்போதுள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு விரைந்து அனுப்பிட வேண்டும். 2023 ஜூன் 3-ஆம் நாள் திருவாரூரில் கலைஞர் கோட்டமும் அருங்காட்சியகமும் திறக்கப்படும் நாளில், கோட்டம் போல உயர்ந்து நிற்க வேண்டும் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை’’ என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.