தஞ்சை மாவட்டத்தில் கோவில் சிலைகள் திருடு போன வழக்கில் வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை கைது செய்துள்ள காவல் துறை அவரிடம் இருந்து இரண்டு சிலைகளையும் வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை என் ஜி ஓ காலனி சார்ந்தவர் செல்லதுரை 59 வயதான இவர் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். இன்னும் சில மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.
இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குறிஞ்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த விஸ்வநாத ஸ்வாமி கோவிலில் மராமத்து பணிகள் நடந்தன. இதன் காரணமாக கோவில் சிலைகள் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் விநாயகர் மற்றும் மூஞ்சூறு ஆகிய இரண்டு கற்சிலைகள் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் காவல் துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை கோவில் சிலைகள் திருடு போனது தொடர்பாக வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் செல்லதுரை கைது செய்துள்ளது. மேலும் அவரிடமிருந்து இரண்டு கற்சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.