66.9 கோடி பயனர்களின் தரவுகள் விற்பனை: 11 நிறுவனங்களுக்கு சைபராபாத் காவல் துறை நோட்டீஸ்

சைபராபாத்: இந்தியாவின் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களைச் சேர்ந்த சுமார் 66.9 கோடி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பயனர் தரவுகளை தட்டி தூக்கிய வினய் பரத்வாஜ் எனும் நபர், அதை திருடியாதோடு மட்டுமல்லாது தன் கைவசம் இருந்த தகவல்களை விற்பனையும் செய்துள்ளார். இணைய பயனர்களின் தனிப்பட்ட ரகசியத் தகவல்களை திருடிய குற்றத்திற்காக அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்களையும் திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எப்படி இவ்வளவு தரவுகள் கசிந்தது என்ற விசாரணையை சைபராபாத் போலீஸார் துவங்கியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மூன்று வங்கிகள், சமூக வலைதள நிறுவனம், பலசரக்கு விற்பனை செய்யும் நிறுவனம், ஐடி சேவை வழங்கும் நிறுவனம், டிஜிட்டல் பேமெண்ட் செயலி மற்றும் ஆன்லைன் இன்சூரன்ஸ் தளம் என மொத்தம் 11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது காவல் துறை. ‘InspireWebz’ எனும் தளம் மூலம் கிளையண்ட்களுக்கு தரவுகளை கைதான வினய், விற்பனை செய்துள்ளார். வினய், தெலங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்படி இந்த நிறுவனங்கள் தங்களது பயனர்களின் தரவுகளை கையாள்கின்றன? தரவுகள் சார்ந்து கடைபிடிக்கும் நடைமுறைகள் மற்றும் கொள்கைகள், யார் இந்த தரவுகளை கையாள்கிறார்கள் போன்ற விவரத்தை நேரில் ஆஜராகி விவரிக்குமாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிறுவனத்துடன் தொடர்பில்லாத மூன்றாவது நபருக்கு தரவுகள் கசிந்தது எப்படி? வரும் நாட்களில் இது போல நடக்காமல் இருக்க என்ன செய்யலாம்? மேலும், தரவு பாதுகாப்பு நடைமுறையில் உள்ள லூப்ஹோல் என்ன? என்பது மாதிரியானவற்றை போலீஸார் கண்டறிய உள்ளதாக தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.