சென்னை: Adjustment in Lawrence Movie (லாரன்ஸ் படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட்) லாரன்ஸ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற முத்தம் கொடுத்து காண்பிக்க வேண்டும் என சீரியல் நடிகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ்.
சிரஞ்சீவி கொடுத்த வாய்ப்பு
சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர். அதனையடுத்து பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரது நடன அமைப்பு வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் அமைந்ததால் லாரன்ஸ் ஸ்டைல் ஆஃப் டான்ஸ் என்றும் ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.

நடிகராக வலம் வந்த லாரன்ஸ்
நடன அமைப்பாளராக கேமராவுக்கு பின்னாடி மட்டும் நிற்காமல் பாடல்களிலும் தலை காண்பித்து நடனம் ஆடினார். அதுவரை பிரபுதேவாவே கதி என்று கிடந்த ரசிகர்கள் லாரன்ஸின் நடனத்தை வெகுவாகவே ரசித்தனர். இப்படிப்பட்ட சூழலில் அஜித்குமார் நடித்த உன்னைக்கொடு என்னைத் தருவேன், பிரசாந்த்தின் பார்த்தேன் ரசித்தேன், கே.பாலசந்தரின் 100ஆவது படமான பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்கள் செய்தார். அதேபோல் அற்புதம் படத்தின் ஹீரோவாக அறிமுகமானார்.

இயக்கத்தில் மாஸ் காட்டிய லாரன்ஸ்
நடன அமைப்பாளர், நடிகராக வலம் வந்துகொண்டிருந்த லாரன்ஸ் 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் ஸ்டைல், டான் ரெபெல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.அப்படத்தில் ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மெகா ஹிட்டான காஞ்சனா
தமிழில் அவர் இயக்குநராக அறிமுகமானாலும் மெகா ஹிட் அவருக்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த 2011ஆம் ஆண்டு காஞ்சனா படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் காஞ்சனா தவிர மற்ற படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றது. காஞ்சனா ஏற்படுத்திய டிமாண்டால் அந்தப் படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்தார் அவர்.

ஒருபக்கம் நல்லது; மறுபக்கம் சர்ச்சை
ராகவா லாரன்ஸ் பலருக்கு உதவி செய்திருக்கிறார். அவர் நல்லது செய்தாலும் ஒருசில விஷயங்களில் சர்ச்சைகளை சம்பாதித்திருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் ஹீரோ விஷால், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் என யாரையும் விட்டுவைக்காமல் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் அளித்தார். அதில் ராகவா லாரன்ஸும் ஒருவர்.

புதிய சர்ச்சையை கிளப்பிய நடிகை
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மீது புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தீபிகா அளித்த சமீபத்திய பேட்டியில், “ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக அறிந்து ஆடிஷனில் கலந்துகொண்டேன். அப்போது இருந்த ஒரு ஆள், ‘இந்தப் படத்தில் முத்தக்காட்சிகள் அதிகம் இருக்கின்றன. எனவே முத்தம் கொடுத்து காட்ட வேண்டும்’ என்றார்.

மறுப்பு தெரிவித்தேன்
ஆனால் அப்படி என்னால் நடிக்க முடியாது. வேறு காட்சிகள் இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்றேன். அதற்கு அவர் இப்போதுதான் சுமார் 8 பெண்கள் இப்படி நடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே உங்களுக்கு மட்டும் தனியாக ஒரு காட்சி கொடுக்க முடியாது என கூறினார். ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன் என தீபிகா கூறியுள்ளார்.