தமிழக ஆளுநரை இன்று இரவு 7 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு ராஜ்பவ்வனில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து, இன்று மாலை நாகர்கோவில் பாஜக மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர், பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜகவினரும் கோஷமிட, ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து, ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏ காந்தி தலைமையில் தற்போது சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து ஆளுநரை சந்தித்து அண்ணாமலை முறையிட இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், கடந்த மாதம் நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது போலீசார் முன்னிலையில் நடந்த தாக்குதல், தினந்தோறும் நடக்கும் படுகொலை, கொள்ளை, ரவுடிகள் அட்டகாசம், வழிப்பறி உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரிடம் அண்ணாமலை புகார் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாஜக எம்எல்ஏ.,க்களுக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் திமுக ஆர்எஸ் பாரதி பேசியது தொடர்பாக தமிழக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்தும் அண்ணாமலை புகார் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.