சென்னை : கிட்னி பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் குண்டு கல்யாணம்,சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பேட்டியில் கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் குண்டு கல்யாணம். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரின் நடிப்பு மற்றும் உடல் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
தீவிர அதிமுக தொண்டரான இவர் தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார்.
குண்டு கல்யாணம்
ஊடகம் ஒன்றுக்கு குண்டு கல்யாணம் அளித்துள்ள பேட்டியில், தலையில் பெரிய பொட்டுவைத்து இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். மனிதராக பிறந்த அத்தனை பேருக்கும் ஏதோ ஒருவகையில் பக்தி இருக்கும், ஆனால் எனக்கு மூன்று வயது இருக்கும் போதே என் அப்பா நெற்றியில் விபூதி, பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பழக்கப்படுத்தினார். அது அப்படியே பழக்கமாகிவிட்டது.

இறுதிச்சடங்கு கூட பணம் இல்லை
என்னுடைய அப்பா குண்டு கருப்பையா அந்த காலத்தில் நாடக கம்பேனி வைத்து மிகவும் பிரபலமாக இருந்தார். பாடங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில், 60 பேரை வைத்து ஒரு நாடக கம்பேனி ஆரம்பித்தார் அது சரியாக போகாததால், லாஸ் ஆகிவிட்டது. இதனால், கடைசி காலத்தில் அவரின் இறுதிச்சடங்குக்கு கூட பணம் இல்லை. அந்த நேரத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் உதவி செய்தார். அதன் பின் என்னை படிக்க வைத்து என் குடும்பத்தை அவர் தான் பார்த்துக்கொண்டார்.

பெயரை மாற்றிக்கொண்டேன்
விசு சாரின் படத்தில் நடித்த போது அவர் எப்போதும் கதாபாத்திரத்தின் பெயரை வைத்துத்தான் கல்யாணம் என்று அழைப்பார். அதே போல பாலசந்தரும் கல்யாணம் என்று அழைப்பார். இந்த பெயரும் நன்றாக இருந்ததால், இந்த பெயரையே அப்பாவின் பெயரோடு சேர்த்து குண்டு கல்யாணம் என்று வைத்துக்கொண்டேன் என்றார்.

கிட்னி பிரச்சனை
நானும் அப்பாவைப்போல நன்றாக குண்டாக இருப்பேன். ஆனால், தற்போது கிட்டினியில் பிரச்சனை இருப்பதால், வாரத்திற்கு இரண்டு நாள் டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன். ஒரு முறை டயாலிசிஸ் செய்ய இரண்டு ஆயிரம் முதல் மூன்றாயிரம் வரை செலவாகிறது. கடந்த 3 வருடமாக டயாலிசிஸ் செய்து வருகிறேன். என்னுடைய மருத்துவ செலவையும் என்னையும் என் மகள் தான் பார்த்துக் கொள்கிறாள். மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற எந்த கெட்டப்பழக்கமும் எனக்கு இல்லை இருந்தாலும் கடவுள் எனக்கு இப்படி ஒரு பிரச்சனையை கொடுத்துவிட்டார்.

உயிர் பிழைக்க உதவி செய்யுங்கள்
ஜெயலலிதா அம்மா உயிரோடு இருந்து இருந்தால், நிச்சயம் எனக்கும் என் குடும்பத்திற்கும் உதவி செய்து இருப்பார் அவர் உயிரோடு இல்லாதது எனக்கு மிகப்பெரிய இழப்பாகி விட்டது.கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு பல லட்சத்தில் செலவு ஆகும். உயிர் பிழைத்து வாழ யாராவது உதவி செய்தால் நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும். அரசியலுக்கு வந்ததால், சினிமா வாய்ப்புகள் வரவில்லை இப்போதும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார்.