சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்)அயோத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மந்திரமூர்த்தியை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் சசிக்குமார். முதல் படமே அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. அதனையடுத்து ஈசன் படத்தை இயக்கினார். இந்தப் படமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் முழுநேர நடிகராகிவிட்டார் சசிக்குமார்.
சசிக்குமார் நடித்திருக்கும் அயோத்தி
தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சசிக்குமார் நடித்த படம் அயோத்தி. மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியான இப்படத்தை மதத்தை தாண்டி மனிதத்தை பேசுகிறது என அனைவரும் கொண்டாடினர். சசிக்குமாரின் நடிப்பையும், படத்தின் மேக்கிங்கையும் பலரும் பாராட்டினர். மேலும் அயோத்தி படம் சசிக்குமாருக்கு நடிகராக ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
அயோத்தி சந்தித்திருக்கும் கதை சர்ச்சை
அதேசமயம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் படத்தை சுற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. அதாவது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது எழுத்தாளர் நரன், தனது வாரணாசி கதையை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து மாதவராஜ் என்ற எழுத்தாளரும் நான் எழுதிய கதையை அயோத்தி படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால், அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார். இப்படி இந்தக் கதைக்கு மூன்று எழுத்தாளர்கள் சொந்தம் கொண்டாடினார்கள். இருந்தாலும் படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
இயக்குநரை பாராட்டிய நடிகர் மன்சூர் அலிகான்
இந்நிலையில் அயோத்தி படத்தை இயக்கிய மந்திரமூர்த்தியை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் அழைத்து பாராட்டி மாலை அணிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மன்சூர் அலிகான் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படமான லியோ படத்தில் கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் மாதவராஜ் வைத்திருக்கும் குற்றச்சாட்டு
முன்னதாக, மாதவராஜ் தனது முகநூல் பக்கத்தில் அயோத்தி படம் நேற்று பார்த்து விட்டேன். தீராத பக்கங்களில் – 2011ல் எழுதியதுதான் மூலக்கதை. அப்படியே இருக்கிறது.
திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. பீகாரில் இருந்து வந்தவர்களாக குறிப்பிட்டு இருந்தேன். அதை அயோத்தியாக மாற்றி இருக்கிறார்கள். ஒரு கிராம வங்கி ஊழியராக பாதிக்கப்பட்டவரைச் சொல்லி இருந்தேன். சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிய ஒரு சங்கியாக அந்த வட இந்திய மனிதரை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு மகள்களும், ஒரு மகனும் என பதிவு செய்திருந்தேன்.
ஒரு மகளும், மகனும் என காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிய தமிழ்நாட்டு மனிதர்களாக எங்கள் வங்கியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜோதிக்குமாரையும், சுரேஷ் பாபுவையும் குறிப்பிட்டு இருந்தேன். இதில் விபத்துக்குள்ளான கார் டிரைவரின் நண்பனான சசிக்குமாரும் இன்னொருவரும் உதவுவதாக சித்தரித்து இருக்கிறார்கள். ரம்ஜான் பண்டிகை மற்றும் மங்காத்தா பட ரிலீசை ஒட்டிய ரசிகர்களின் கொண்டாட்டங்களாய் வெளியுலகம் இருந்ததை குறிப்பிட்டு இருந்தேன். இதில் தீபாவளி கொண்டாட்டங்களாய் காட்டி இருக்கிறார்கள்.
நான் எழுதியது அப்படியே இருக்கிறது.
ராமேஸ்வரம் வந்த வடநாட்டு குடும்பம் கார் விபத்தில் சிக்குவது, அந்த குழந்தைகளின் அம்மா இறந்துபோவது, நிலமும் மொழியும் வேறான மதுரையிலிருந்து அந்த குடும்பத்தை கடும் சிரமங்களுக்கு இடையே விமானத்தில் எப்படி அனுப்பி வைத்தனர் என்னும் மையக்கதை அப்படியே இருக்கிறது. படத்தை இன்னும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் எடுத்து இருக்க முடியும் என்றாலும் – நல்ல சினிமா. நிச்சயம் பாராட்டலாம். வரவேற்கலாம். ஆனால் படத்திற்கு நான் எழுதிய பதிவே அச்சாணி என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை” என நீண்ட பதிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.