மும்பை: Rajinikanth Wrote Letter To Ambani (அம்பானிக்கு கடிதம் எழுதிய ரஜினிகாந்த்) முகேஷ் அம்பானிக்கு ரஜினிகாந்த் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இந்தியா முழுவதும் பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். சாமானியர்கள் மட்டுமின்றி திரையுல பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கின்றனர்.
ஜெயிலரில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த்
தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதனால் கட்டாயமாக ஹிட் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அவரது அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். படத்துக்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினி நடிக்கும் புதிய படங்கள்
ஜெயிலர் படத்துக்கு பிறகு லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார் ரஜினிகாந்த். அதன்படி தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்திலும், ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த த.செ.ஞானவேல் இயகக்த்திலும் நடிக்கவிருக்கிறார். ஞானவேல் படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவிருக்கிறது என கூறப்படுகிறது. லால் சலாமில் ஒரு மணி நேரம் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
ரஜினி திறந்து வைத்த அம்பானி வீட்டு கட்டடம்
இந்நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் மும்பை சென்றார். அங்கு அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி கலாசார மைய கட்டடம் ஒன்றை கட்டியிருக்கிறார். இதனை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ரஜினியுடன் அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்துடம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. மேலும் ரஜினியை கறுப்பு டி ஷர்ட், பேண்ட்டில் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வயதே ஆகாதா எனவும், வயசானாலும் ஸ்டைலும், அழகும் இன்னும் போகல என்றும் கமெண்ட் செய்தனர்.
ரஜினி எழுதிய கடிதம்
முகேஷ் அம்பானிக்கும், அவரது மனைவி நீட்டா அம்பானிக்கும் ரஜினிகாந்த் எழுதிய கடிதத்தில், “கலாசார மையத்தின் பிரமாண்ட அலங்காரம், சிறப்பான கட்டட கலையால் நான் பெரிதாகவே ஈர்க்கப்பட்டேன். இந்திய கலைகளை மேம்படுத்துவதற்காக பிராட்வே பாணி கலாசாரம் மையத்தை திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெரிய கனவு
இந்த அரங்கத்தின் அற்புதமான் வசதி என்னை பிரமிக்க வைத்தது. இந்த வசதிகளை பார்த்த பிறகு என்.எம்.ஏ.சி.சி திரையரங்கத்தில் நடிக்க விரும்புகிறேன். இதில் ஒருமுறையேனும் நடித்துவிட வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு என்னுடைய மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.